×

பாப்பாந்தாங்கல்- புதூர், களம்பூர்- ஏந்துவாம்பாடி இடையே குண்டும், குழியுமான சாலைகளால் கிராம மக்கள் அவதி

செய்யாறு: செய்யாறு அடுத்த பாப்பாந்தாங்கல் - புதூர், களம்பூர் - ஏந்துவாம்பாடி இடையே குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யாறு அடுத்த பாப்பாந்தாங்கல் கிராம ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பாப்பாந்தாங்கலில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப துணை சுகாதார நிலையம், நூலகம், கூட்டுறவு அங்காடி என அனைத்து வசதிகளும் உள்ளது. இதனால், புதூர் கிராம மக்கள் தங்களது தேவைக்காக தினசரி பாப்பாந்தாங்கல் கிராமத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், பாப்பாந்தாங்கல்- புதூர் இடையே 2 கி.மீ. தூரமுள்ள சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலை நீடிக்கிறது. இதனால், அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும், அரசு பஸ் பாப்பாந்தாங்கல், புதூர் வழியாக ஏனாதவாடி கிராமத்திற்கு சென்று வந்தது. இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியதால் 4 கி.மீ. தூரம் ஊர்களை சுற்றி செல்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாப்பாந்தாங்கல்- புதூர் இடையே சேதமடைந்துள்ள சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போளூர்: போளூர் ஒன்றியம், களம்பூர்- ஏந்துவாம்பாடி சாலையில் உள்ள பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்காக போளூர் மற்றும் களம்பூருக்கு இந்த சாலை வழியாக தான் தினசரி சென்று வருகின்றனர். மேலும், களம்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், வழியிலுள்ள நவீன அரிசி ஆலைகளுக்கும் இவ்வழியாக தான் செல்ல வேண்டும்.

இந்நிலையில், களம்பூர்- ஏந்துவாம்பாடி இடையே தார்சாலை அமைத்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. பாதி சாலையை அமைத்துவிட்டு இடையில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.எனவே, கிராம மக்களின் நலன் கருதி, களம்பூர்- ஏந்துவாம்பாடி சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : roads ,Kalampur-Entuvampadi ,Pappanthangal-Puthur , seiyaru, road, people suffer
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...