×

மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு : சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை; காலம் தாழ்த்துவதால் அரசு பள்ளி மாணவர்கள் அச்சம்

சென்னை,: மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது பற்றி கவர்னர் பன்வாரிலால் புரோகிக் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. இதையடுத்து தமிழகத்தில் விரைவில் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். இது சம்பந்தமான வழக்கு கடந்த வாரம் மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர், ‘’தமிழக கவர்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்த பிறகே தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும்’’ என்று அறிவித்தார். இதையடுத்து வழக்கு வருகிற 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகிய 5 பேர் நேற்று சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.அப்போது, ‘‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர்.கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமார், கவர்னரின் பரிசீலனையில் மசோதா இருக்கிறது. அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாக நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழகத்தில் மருத்துவ கவுன்சலிங் நடத்த வேண்டும் என்றால், 7.5 சதவீத இடஒதுக்கீடு வந்தால் மட்டுமே நடத்த முடியும் என்றும் சொல்லிவிட்டோம் என்று கூறினார்.

இந்தநிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், உள்ஒதுக்கீடு மசோதா குறித்து டெல்லியில் உள்ள சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார். எனினும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து, கவர்னர் எப்போது முடிவெடுப்பார் என தெரியவில்லை. மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கும் வரை, கவுன்சிலிங்கும் நடைபெறப்போவதில்லை. மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வருவது, மருத்துவ படிப்பு கனவில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Governor ,experts ,Government school students , Medical College, Internal Allocation, Legal Specialists, Governor, Consulting
× RELATED மருத்துவ மாணவர் சேர்க்கையில்...