இயற்கை அழகின் சிகரம்... சிரமங்களும் ஏராளம்... ‘ஏரிக்காடு தாங்க ஏற்காடு ஆனது’...

நிகழ்வுகளை விட, அந்த நிகழ்வுகளால் பதிந்திருக்கும் நினைவுகளே என்றென்றும் நிலைத்திருக்கும் பொக்கிஷங்கள். இப்படி பண்பாடும், கலாச்சாரமும் நிலைத்திருக்கும் தமிழ் நிலத்தில் ஒவ்வொரு பகுதியும் அளப்பரிய பெருமைகளை கொண்ட அரிய பொக்கிஷமாக திகழ்கிறது. இந்த பகுதிகள் குறித்து நாம் அறிந்த, அறியாத தகவல்களை நினைவலைகளில் சுழல வைப்பதற்காக வருகிறது  இந்த ‘பிளாஷ்பேக்’. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடருக்கு உட்பட்ட சேர்வராயன் மலையில் அமைந்திருக்கிறது இயற்கை எழில் சூழ்ந்த ஏற்காடு. கடல் மட்டத்திலிருந்து 1,515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏற்காடு தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது என்பது அனைவரும் அறிந்த தகவல் என்றால் அது மிகையல்ல. ஆனால் இந்த ஏற்காடு ஒரு காலத்தில் மனிதர்கள் செல்ல அஞ்சிய பெருங்காடாக இருந்தது. கொடிய மிருகங்களும், விஷ ஜந்துக்களும் மட்டுமே அங்கு இருந்தன. கடும் முயற்சிகளுக்கு பிறகு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காபி பயிரிட கண்டுபிடிக்கப்பட்ட ஏரிக்காடு தான் இப்போதைய ஏற்காடு என்பதும் நம்மில் பலர் அறியாத ஒன்று.

இறைவன் படைத்த இயற்கை, ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்களின் கை வண்ணங்களால் கரைந்தும் போகிறது. காலம் கடந்தும் நிற்கிறது. அந்த வகையில் காலம் கடந்து நிற்கும் ஏற்காட்டுக்கு பல்வேறு பெருமைகள் உள்ளது. நீலகிரி மலையை கோடை வாசஸ்தலமாக தேர்வு செய்வதற்கு முன்பே, ஏற்காட்டை தேர்வு செய்தனர் ஆங்கிலேயர் என்பது பல்வேறு ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த கார்க்பன் (1820-29) ஏற்காட்டில் முதன்முதலாக குடியேறினார். காபி, ஆப்பிள், பியர்ஸ், லாக்குவாட்ஸ் முதலியவற்றை பயிரிட்டு சோதனைகள் நடத்தினார். இன்று ஏற்காட்டுக்கு அருகிலிருக்கும் கிரேஞ்ச் தோட்டம் தான், இவரது சோதனைக்களமாக இருந்தது. இதற்காக அவர் எழுப்பிய கட்டிடமே, ஏற்காடு மலையின் முதல் கட்டிடம் என்ற பெருமையை பெற்றது. 1823ம் ஆண்டு சேலத்தில் அரசாங்க மருத்துவ அதிகாரியாக இருந்த ஆங்கிலேயர் ஒருவரை, ஏற்காட்டின் இயற்கை அழகு வெகுவாக கவர்ந்தது. கோடையில் வாழ்வதற்கு ஏற்ற இடம் இது என்பதை உறுதி செய்தார். அப்போது சர் தாமஸ் மன்றோ மாநில ஆளுநராக இருந்தார். அவருடைய ஆணைப்படி இங்கிலண்ட் என்பவர், சேர்வராயன் மலைகளை அளந்து அறிக்கை அனுப்பினார்.

1824ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் தளபதியாக பணியாற்றிய வெல்ஷ்துரை சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சேர்வராயன் மலைத் தொடரையும் பார்வையிட்டார். இதற்கடுத்து சேலம் மாவட்ட கலெக்டராக இருந்த பெட் என்பவர், ஏற்காட்டில் காபி பயிரிடுவதை முழுமையாக்கினார். மக்கள் வருவாய்க்காக அதிகளவில் அங்கு குடியேறத் துவங்கினர். அப்போது சேலம் மாவட்ட தலைமை மருத்துவராக இருந்தவர், சேர்வராயன் மலையின் மீது மல்லாபுரத்தில் இருந்து ஒரு மலைப்பாதை அமைப்பது அவசியம் என்றார். இந்த காலகட்டத்தில் மலைப்பகுதிகளில் பரவிய ஒரு வித மர்மகாய்ச்சலுக்கு மருத்துவர் பலியானார். மக்களும் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறினர்.

இப்படிப்பட்ட நிலையில் 1841ம் ஆண்டு லெச்லர் என்ற பாதிரியார், அப்போது சேலம் மாவட்ட துணை ஆட்சியரான பிரெட் என்பவருடன் இணைந்து இங்குள்ள மலை வளங்களை ஆய்வு செய்து வியந்தார். மேலும் துணை ஆட்சியர் பிரெட் கலைநயத்தோடு அழகிய வீடு ஒன்றை 1845ல் வடிவமைத்தார்.இந்த கட்டிடம் தற்போது ஓட்டலாக உருமாறி நிற்கிறது. அதன்பிறகு ஒவ்வொரு காலகட்டத்திலும் பரிணாம வளர்ச்சி பெற்று கண்ணுக்கு விருந்தளித்து, மனதிற்கு இதமளிக்கும் இயற்கையின் ஒப்பற்ற வரப்பிரசாதமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது ஏற்காடு.

ஒவ்வொரு தேர்தலுக்கும் இதே வாக்குறுதி தானாம்

‘‘கேளிக்கைகளுக்காக ஏற்காட்டிற்கு வந்து பணத்தை தண்ணீராக செலவழிப்போர் அதிகம் உள்ளனர். ஆனால் இங்குள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலையிலேயே பல இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவோம், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவோம், மலைகிராமக்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவோம் என்று ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் கட்சிகள் உதார் விட்டு வாக்கு சேகரிக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக இவை அனைத்தும் வாக்குறுதிகளாகவே உள்ளது. மீண்டும் அடுத்த தேர்தலுக்கு தான், அதே வாக்குறுதிகளோடு வலம் வருகின்றனர்,’’ என்பது இங்குள்ள மக்களின்  பெரும் வேதனையாக உள்ளது.

சிரமத்துடன் வாழும் மலைகிராம மக்கள்

படகு இல்லம், ரோஜாத்தோட்டம், ஐந்திணை பூங்கா, தாவரப்பண்ணை என்று சுற்றுலா பயணிகளுக்கு  சொர்க்கமாக திகழும் ஏற்காடு, அங்கு வாழும் மக்களுக்கு சிரமங்களின் மொத்தவடிவமாக உள்ளது. இங்குள்ள மலைகிராமங்களில் சுதந்திரம் பெற்று 75ஆண்டுகளாகியும் இன்றுவரை அடிப்படை வசதிகள் இல்லை. சிதைந்த மண் சாலைகள்,ஒட்டுத்திண்ணை வீடுகள், எரியாத தெருவிளக்குகள், எப்போதும் தடைபடும் மின்சாரம், அடிக்கடி நேரும் இயற்கை சீற்றங்கள் என்று அனைத்தையும் எதிர்கொண்டே அவர்களின் எதிர்காலம் சுழன்று கொண்டிருக்கிறது.

3 நாடுகளாக இருந்த சேர்வராயன் மலை

பழைய கொங்கு நாட்டில் 24 பிரிவுகள் இருந்தன. அவற்றில் சேர்வராயன் மலையில் முட்டநாடு, மேகநாடு, சீலநாடு என்று 3நாடுகள் இருந்தன. இதில் முட்டநாடு பாளையக்காரர் மல்லையா கவுண்டர் ஆதிக்கத்திலும், மேகநாடு பாளையக்காரர் சின்னமநாயக்கர் ஆதிக்கத்திலும் இருந்தது. சீலநாடு என்பது பாதி மலையிலும், இதர பகுதிகள் சமவெளியிலும் இணைந்திருந்தது. இந்த மக்களை மலையாளிகள் என்று அழைத்துள்ளனர் என்று வரலாற்று ஆசிரியர் வில்கின்சன் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆளுமைக்கு முன்புவரை புதிய கற்கால நாகரீகத்தின் அடிப்படையில் மக்கள் இங்கு வாழ்க்கை நடத்தி உள்ளனர் என்பதற்கான கல்வெட்டுகள், நடுகற்கள், பழம்பொருட்கள் ஆதாரமாக கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>