×

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி தொலைந்த வாழ்க்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சுமார் ரூ.30 லட்சத்தை இழந்த விஜயகுமார் என்ற வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்துள்ள சம்பவம் இணைய விளையாட்டில் மூழ்கி கிடக்கும் இன்றைய இளம் தலை
முறைக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது. அவர் தற்கொலைக்கு முன்பு மனைவிக்காக பேசி வெளியிட்ட வாட்ஸ்அப் ஆடியோ பலரது மனதை பாரமாக்குவதோடு, ஆன்லைன் ரம்மி விளையாட்டின் கொடூரத்துக்கு சாட்சியாகவும் முன்நிற்கிறது.

சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் நாயகன் நட்டி (எ) நட்ராஜ், “ஒருத்தன ஏமாத்தனும்னா அவனோட ஆசைய தூண்டனும்” என ஒரு வசனம் பேசுவார். அந்த வசனம்தான் ஆன்லைன் ரம்மியின் அடிநாதமே. செல்போன் வைத்திருக்கும் அனைவருமே, நீங்க ரம்மி விளையாடி ஜெயிக்கலாம் என ஒரு விளம்பரத்தை பார்த்து இருக்கலாம். இந்த விளம்பரத்தை பார்த்து, கடந்து செல்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். அதில் அப்படி என்னதான் இருக்கிறது என பார்க்க விரும்புகிறவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு மாட்டிக்கொள்பவர்கள் மீள வழியே இல்லாமல், ஆன்லைன் இரும்பு கதவு அடைக்கப்பட்டுவிடுகிறது. முதலில் ரூ.100 வைத்து ஆடினால் ரூ.500 கிடைக்கிறது.

அடுத்து 500 வைத்தால் ஆயிரம் கிடைக்கிறது. இப்படியே ஆயிரம், ஒரு லட்சம் என கிடைக்க வைத்து, விளையாடுபவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் ரம்மி, இறுதியில் அவரிடம் இருந்து லட்சக்கணக்கில் பிடுங்கிவிடுகிறது. அவர்களும் விட்டதை பிடிப்போம் என்று ஓடினால், அது கடைசியில் கானல் நீராகிவிடுகிறது. இப்படித்தான் புதுச்சேரி விஜயகுமார் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்திருக்கிறார். ஆன்லைன் ரம்மியில் விரும்பி மாட்டிக்கொள்பவர்களின் கதைகள் இதுபோல் ஏராளமாக உள்ளது. ஆனால் புதுச்சேரியில் ரம்மி என்றால் என்னவென்றே தெரியாத பலர் இதில் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் புயலை கிளப்பியிருக்கிறது.

புதுச்சேரியில் இயங்கி வரும் ஒரு புகழ்பெற்ற வீட்டு உபயோக நிறுவனத்தில் பொ ருட்கள் விற்கும் டிவி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன் என அனைத்தும் விற்கப்படுகிறது. இங்கு பொருட்கள் வாங்க வந்த ஒரு நபர், பணம் கட்டுவதற்காக தனது வங்கி கணக்கை தெரிவித்துள்ளார். அந்த நிறுவனத்தின் ஒரு பணியாளர், பொருளுக்குரிய பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பில் போட்டு கொடுத்துள்ளார். அந்த வாடிக்கையாளரும் பொருளை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து பேங்க் ஸ்டேட்மென்ட் எடுத்து பார்த்தபோது, ஒரு குறிப்பிட்ட தொகை ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது என கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் அந்த வாடிக்கையாளர் மீளவில்லை.

இதேபோல பல நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் பணத்தில் இருந்து ரம்மி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் பணம் வைத்திருக்கும் சில பெரிய மனிதர்களிடம் இந்த ஸ்டைலில் ரம்மி விளையாடுவதற்கு ஒரு நெட்வொர்க்கே இயங்குகிறது என தெரிவிக்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். இதுதவிர செல்போன் சர்வீஸ் கடைகளும் இந்த விளையாட்டில் இணைந்திருக்கிறார்களாம். ஏற்கனவே சர்வீசுக்காக செல்போனை தந்த பலரின் அந்தரங்கத்தை சிலர் திருடி விடுகிறார்கள். இப்போது ஆன்லைன் ரம்மியிலும் இவர்கள் கைவரிசை காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

சில ஆன்லைன் பண பரிவர்த்தனை நிறுவனங்களும், வாடிக்கையாளர்களின் பணத்தில் இருந்து ரம்மி விளையாடி கும்மி அடிப்பதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு விவகாரம் இதில் மேலும் அதிர்ச்சியை தருவதாக உள்ளது. பல வீடுகளில் தற்போது தந்தைகளின் செல்போனை, மகன்களே இயக்கி வருகின்றனர். இவ்வாறு செல்போன் கைமாறும்போது, தந்தையின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் விளையாடிவிட்டு, கமுக்கமாகி விடுகிறார்கள் சிலர். ெமாத்தத்தில் குச்சி மிட்டாய் விற்பவன் முதல் கோடீஸ்வரர் வரை இந்த விளையாட்டில் நிர்கதியாகிவிடுகிறார்கள்.

இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தற்போது ஆன்லைன் மோசடிகள் பல வடிவில் நடந்துகொண்டிருக்கிறது. இதில் ரம்மி விளையாட்டு பல ரகசியங்களை கொண்டதாக உள்ளது. இதில் சில நிறுவனங்களின் பணியாளர்கள், வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடியாக பெற்று விளையாடுகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் யாரிடமும், தங்கள் செல்போனை தரக்கூடாது. ஏடிஎம் நம்பர் மற்றும் பாஸ்வேர்டுகளை தரக்கூடாது. இதுகுறித்து எவ்வளவு அறிவுறித்தினாலும் சிலர் கேட்பதில்லை. வீடுகளிலும் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? என கவனிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மோசடிகளை நாம் தவிர்க்க முடியும், என்கிறார்.

முடியும் ஆனா முடியாது

ஆன்லைன் ரம்மியை புதுச்சேரியில் தடை செய்ய முடியுமா? என காவல் துறையை கேட்டால் ஒரு தரப்பு முடியும் என்கிறது. மற்றொரு தரப்பு முடியாது என்கிறது. முடியும் என்கிற தரப்பு, சமீபத்தில் ஆந்திராவில் ஆன்லைன் ரம்மியை தடை செய்திருக்கிறார்கள். இதுபோல் இங்கும் செய்யலாம் என்கிறது. முடியாது என்கிற தரப்பு, ஆன்லைன் ரம்மி விளையாட்டு மத்திய அரசின் அனுமதியோடு நடக்கிறது. இதை மாநில அரசு ஒன்றும் செய்ய முடியாது என்கிறது.

புகார்கள் ஏற்கப்படுவதில்லை

புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் நடந்த ஏடிஎம் மோசடியில் வெளிநாட்டு நபர்கள் கூட சிக்கினர். சமீபத்தில் கோரிமேடு இன்ஸ்பெக்டர் இனியன் பெயரில் முகநூல் கணக்கு துவங்கி, மோசடி செய்ய முயன்றிருக்கிறார் ஒருவர். இதுபோல் பல பிரச்னைகள் தினமும் வந்தபடி இருக்கின்றன. ஆனால் இவற்றை காவல் நிலையங்களில் புகார் செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் நீடிக்கின்றன. ஆன்லைன் மோசடி நடந்தால், உடனே அருகில் உள்ள காவல் நிலையங்களுக்குத்தான் மக்கள் வருகிறார்கள். ஆனால் காவல் நிலையங்களில் புகார்களை பெறாமல், சைபர் கிரைமுக்கு செல்லுங்கள் என கூறுகிறார்கள். இதனால் அவர்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.

Tags : Rummy online
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி