காணொலி கூட்டங்களால் கஷ்டம் தீருமா? குறைகளுக்கு பதில் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாட்டம்

நெல்லை: குறைதீர்ப்பு கூட்டங்கள் காணொலி மூலம் நடப்பதால், விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தங்கள் கேள்விகளுக்கு அதிகாரிகள் தரப்பில் உரிய பதில் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக விவசாய குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படவில்லை. ஊரடங்கில் தளர்வு விதிகள் அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டங்கள் தற்போது பல்வேறு மாவட்டங்களில் காணொலி மூலம் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் பகுதி பிரச்னைகளை அங்கிருந்தே காணொலி மூலம் கலெக்டருக்கு தெரிவித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கடந்த 16ம் தேதியன்று காணொலி மூலம் நடந்தது. இதில் வேளாண்மை இணை இயக்குனர், தாமிரபரணி செயற்பொறியாளர் என ஒருசில அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் விவசாயிகள் தங்கள் குறைகளுக்கு உரிய பதில்கள் கிடைக்காமல் திண்டாடினர்.

விவசாய குறைதீர் கூட்டங்கள் நடக்கும்போது எப்போதுமே ஒரு பக்கம் அதிகாரிகள் கூட்டமும், மறுபக்கமும் விவசாயிகளும் காணப்படுவர். விவசாயிகள் தங்கள் பகுதிகளை சார்ந்த விவசாய பிரச்னைகள் மட்டுமின்றி, குடிநீர் பிரச்னை, மின்பகிர்மான பிரச்னை, வங்கி கடன் பிரச்னை என பல்வேறு பிரச்னைகளை தெரிவிப்பர். அதற்கு அந்தந்த துறை அதிகாரிகள் எழுந்து பதில் அளிப்பது வழக்கம். ஆனால் காணொலி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கையை மட்டுமே கூற முடிந்தது. அதற்கான பதில்கள் பெரும்பாலும் வழங்கப்படவில்லை. காணொலி குறைதீர் கூட்டத்திற்கு வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை, குடிநீர் வழங்கல், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என பல்துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை. மேலும் குறைதீர் கூட்டம் ஒவ்வொரு வட்டாரம் வாரியாக நடத்தப்பட்டதால், பொதுவான பிரச்னைகளை விவசாயிகள் பேச முடியவில்லை. களக்காடு வட்டாரம், அம்பை வட்டாரம், நாங்குநேரி வட்டாரம் என ஒவ்வொரு வட்டாரமாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு காணொலியில் அழைக்கப்பட்டனர்.

இதனால் சில பொதுவான பிரச்னைகளை அனைத்து தரப்பும் விவசாயிகளும் எழுப்ப முடியாமல் திண்டாடினர். குறிப்பாக விவசாயிகள் தங்களுக்கு வரவேண்டிய மானிய தொகை மற்றும் பயிர் காப்பீட்டு தொகை குறித்து கேள்வி எழுப்பியபோது, உங்கள் வட்டாரத்திற்கு மட்டும் வரவில்லை என அதிகாரிகள் மழுப்பலாக பதில் தெரிவித்து விட்டனர். அனைத்து வட்டார விவசாயிகளும் பங்கேற்றிருந்தால் விவசாயிகள் தங்கள் கருத்துகளை ஒருங்கிணைந்து தெரிவித்திருக்க வழிகிடைத்திருக்கும். இதுகுறித்து மணிமுத்தாறு பெருங்கால் பாசன விவசாயி சொரிமுத்து கூறுகையில், ‘‘காணொலி மூலம் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டங்கள் எங்களுக்கு ஒருபோதும் பயன் தராது. சமூக இடைவெளியோடு விவசாயிகளை அமர வைத்து கூட்டங்களை நடத்திட மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.

தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் எண்ணிக்கை தற்போது குறைவாகவே உள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது அம்மா சிமென்ட் கிடைப்பதில்லை. கிணற்றை ஆழப்படுத்த மானியம் கேட்டு பல மாதங்கள் ஆகிறது. இத்தகைய கேள்விகளுக்கு பதில் அளிக்க அனைத்து துறை அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம். எனவே வரும் காலங்களில் விவசாய குறைதீர் கூட்டங்களில் துறை அதிகாரிகளை வரவழைப்பதோடு, சமூக இடைவெளியோடு விவசாயிகளை அமர வைத்து நேரடியாக கூட்டம் நடத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>