மின்வேலியில் சிக்கி இறந்ததால் புதைக்கப்பட்ட ஆண் யானைக்கு உடற்கூறாய்வு

ஊட்டி: நீலகிரி வன கோட்டம் ஊட்டி அருகே சின்னகுன்னூரில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஒரு விளைநிலத்தில், மண் சமன்படுத்திய பகுதி வித்தியாசமாக இருந்ததையும், கடும் துர்நாற்றம் வீசியதையும் கண்டறிந்தனர். இது குறித்து அவர்கள் அளிதத தகவலின் பேரில் உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார் உள்ளிட்டோர் சம்பவயிடம் சென்று மண்ணை அகற்றி பார்த்தனர். அங்கு இறந்த நிலையில் ஆண் யானை ஒன்றின் உடல் இருந்ததை கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் நிலத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்த பெந்தட்டி அருகேயுள்ள பெந்தூைர சேர்ந்த விக்னேஷ்வரன்(40), கோபாலகிருஷ்ணன்(20), அஜித்குமார் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் வனவிலங்குகள் தோட்டத்திற்குள் நுழையாமல் இருக்க சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை இறந்ததும், அதை வௌியில் தெரியாமல் மறைக்க பெட்ரோல் ஊற்றியும், துணிகள் மற்றும் காய்ந்த இலை தழைகளை போட்டும் எரித்து பின் பள்ளம் தோண்டி புதைத்ததும் தெரியவந்தது. இதனால் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கோவை வனவிலங்கு கால்நடை மருத்துவர் சுகுமாரன் தலைமையில் முதுமலை மருத்துவர் ராஜேஷ்குமார் ஆகியோர் புதைக்கப்பட்ட யானையின் உடலை மீட்டு சம்பவயிடத்திலேயே நேற்று உடற்கூறாய்வு நடத்தினர்.

இது குறித்து நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா கூறுகையில், ‘‘விவசாய நிலத்திற்கு அருகில் மின் கம்பிகள் உள்ளதால் யானை மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம். இருப்பினும் யானைக்கு நடத்தப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே முழு விவரமும் தெரியவரும். யானை இறந்ததை பார்த்து வெளியில் தெரியாமல் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதுடன், அதனை புதைத்துள்ளனர். நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வன விலங்குகள் வேட்டை, சட்டவிரோத மின்வேலி அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் ஓரிரு இடங்களில் சட்ட விரோத மின்வேலிகள் அமைப்பது, சுருக்கு வைத்து வன விலங்குகள் வேட்டையாடுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்’’ என்றார். கோவை வன கால்நடை மருத்துவர் சுகுமாரன் கூறுகையில், ‘‘யானை இறந்து சுமார் 6 நாட்கள் இருக்கும். இந்த யானைக்கு சுமார் 15 வயது இருக்கும்’ என்றார்.

Related Stories: