கொரோனா, காற்று மாசு, கடும் குளிர்.. மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி : மக்கள் கடும் பீதி

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது இந்தியாவில் குறையத் தொடங்கி இருந்தாலும், தலைநகர் டெல்லியில் இரண்டாவது அலை துவங்கி நடந்து வருகிறது. இதுதொடர்பாக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக குளிர்காலத்தில் வைரஸ் தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னதாகவே எச்சரித்துள்ளது. இது உன்மை தான் என வைரஸ் தடுப்பூசி தயாரித்து அதனை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகளும் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் யானிங் ஜூ உள்ளிட்டவர்கள் கொரோனா பரவல் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில்,பெரும்பாலான சூழ்நிலைகளில், நோய் கட்டுப்பாட்டு மையம் பரிந்துரைத்துள்ள 6 அடி தனி மனித இடைவெளி என்ற தொலைவுக்கு அப்பாலும் சுவாச நீர்த்துளிகள் பயணிப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அது உறுதி செய்யப்பட்டும் விட்டது. மேலும் குளிர் அதிகம் உள்ள சூழலில் நமது சுவாச நீர்த்துளிகள் தரையில் விழுவதற்கு முன்பாக 6 மீட்டருக்கு அதாவது 19.7 அடி அப்பாலும் பயணிக்கின்றன. இதில் ஏற்கனவே இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவுவதாக வந்த புகார்களுக்கும் இது விளக்கமாக இருக்கும்.

இதனால் மழை மற்றும் குளிர்காலத்தில் சுவாச துளிகள் மூலம் கொரோனா அதிகமாக பரவுவும் என்பதில் சந்தேகம் கிடையாது. அதே நேரத்தில் சூடான, வறண்ட இடங்களில் சுவாச நீர்த்துளிகள் எளிதில் ஆவியாகி விடுகின்றன. இத்தகைய நிலைமைகளில், ஆவியாகும் நீர்த்துளிகள் பேசும்போதும், இருமும்போதும், தும்முகிறபோதும் சுவாசத்தின் ஒரு பகுதியாக சிந்தப்படும் மற்ற தூசுப்படலம் மூலம் வந்த வைரஸ் துகள்களுடன் சேரும். இவை மிகச்சிறிய துகள்கள். பொதுவாக 10 மைக்ரான்களை காட்டிலும் சிறியவை. இவை காற்றில் பல மணி நேரம் இடைநிறுத்தப்படலாம். எனவே மக்கள் அந்த துகள்களை வெறுமனே சுவாசிப்பதன் மூலம் எடுத்துக்கொள்ள முடியும். மேலும் குளிர்காலத்தில் நீர்த்துளி தொடர்பு மிகவும் ஆபத்தானது என்பதால் தற்போது உள்ள தனி மனித 6 அடி இடைவெளி என்பது போதாது. இது உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்று தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் குளிர்காலம் என்பது துவங்கி விட்டது. இதில் குறிப்பாக பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் காற்றில் ஈரப்பதம் கலந்தவாறு குளிர் தெரிய ஆரம்பித்துவிட்டது. இதைத்தொடர்ந்து இந்த மாதம் இறுதி வாரத்தில் இருந்து மேலும் அதிகமாக உள்ள குளிரானது ஜனவரி மாதம் கடைசி வரை உட்சப்பட்சமாக இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. மேலும் இந்த ஆண்டில் அதிகப்படியான மழையும் இருந்ததால் வரலாறு காணாத அளவிற்கு டெல்லியில் இந்த வருடம் மைனஸ் டிகிரி அளவிற்கு குளிர் இருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தரப்பிலும் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ராஜஸ்தான், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு கடும் குளிர் ஏற்படும் என்றும், அதனால் அதிகப்படியான உயிரிழப்புகள் இருக்கும் என கடந்த வாரம் வெளிப்படையான எச்சரிக்கையே செய்யப்பட்டுள்ளது. இதேநிலை தான் அதன் பக்கத்து மாநிலமான தலைநகர் டெல்லிக்கும் பொருந்தும். அதனால் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள்  தற்போதே பீதியில் உள்ளனர். இதில் டெல்லி முழுவதும் தங்குவதற்கு வீடு இல்லாமல் சாலை ஓரங்களில் எத்தனை பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் இப்போதே கண்கானிக்க ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று, அதிக்கப்படியான மாசால் தரமற்ற சுவாசக் காற்று, இதை இரண்டையும் தாண்டி தற்போது கடுமையான குளிர் என மும்முனை அச்சத்தினால் தலைநகர் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதில் ஏற்கனவே விதிக்கப்பட்ட ஊரங்கால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் டெல்லி மக்களுக்கு இந்த குளிர் காலம் என்பது மேலும் ஒரு கூடுதல் சவாலாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Related Stories:

>