ஊதியம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை களப்பணியாளர்கள் முற்றுகை

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் களப்பணியாளர்கள்  நியமிக்கப்பட்டனர். இவர்கள், தினசரி வீடுவீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல் வெப்பநிலை ஆகியவற்றை பரிசோதனை செய்து  வருகின்றனர். அதன்படி, 14வது மண்டலத்தில் 62 பெண் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம்  வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட களப்பணியாளர்கள் நேற்று பெருங்குடியில் உள்ள 184வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மாநகராட்சி உயரதிகாரிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஒரு  வாரத்திற்குள் ஊதியம் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories:

>