×

சட்டசபை தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: இன்று 6 மாவட்டத்தை சேர்ந்தவர்களை சந்திக்கிறார்

சென்னை: சட்டசபை தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் ஆலோசனை நடத்துகிறார். முதல் நாளான இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களை சந்தித்து பேசுகிறார். தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளதால் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் காணொலி காட்சி மூலமாக பங்கேற்று பேசி வருகிறார். அப்போது, ‘’அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். திமுக ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று திமுகவினரும் தேர்தல் வேலைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளை சந்தித்து பேச மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். அதன்படி இன்று முதல் அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார். முதல் நாளான இன்று காலை 9 மணியளவில் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்களை சந்தித்து பேசுகிறார். மாலை 4 மணி அளவில் சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார்.

தொடர்ந்து 23ம் தேதி காலை 9 மணியளவில் தெற்கு மண்டலத்தை சேர்ந்த கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளையும், மாலை 4 மணியளவில் ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, மதுரை மாநகர் நிர்வாகிகளையும் சந்திக்கிறார். 27ம் தேதி காலை 9 மணியளவில் கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்ட நிர்வாகிகளையும் மாலை 4 மணி-தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், திண்டுக்கல், 28ம் தேதி காலை 9 மணியளவில் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை. மாலை 4 மணி-கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார். அப்போது கட்சியின் செயல்பாடு எவ்வாறு உள்ளது, சட்டசபை தேர்தல் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் தேர்தல் வெற்றி வியூகம் குறித்தும் அப்போது அவர் ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* மழையில் நெல் மூட்டைகள் வீணாகிறது
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:விளைந்தும் விலையில்லை எனும் அவல நிலையாக, டெல்டா மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல்மூட்டைகள் நனைந்து, முளைத்து வீணாகின்றன. உரியமுறையில் கொள்முதல் நடைபெறாமல் ஆள்வோரின் ஊழல் பெருச்சாளிகள் செய்யும் அட்டகாசங்கள் ஓயவில்லை. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். “காவிரிக் காப்பாளர்” என்ற பட்டம் மட்டும் சூட்டிக்கொண்ட பழனிசாமி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். பயிர் தான் விவசாயிகளின் உயிர். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,consultation ,assembly elections ,executives ,DMK ,districts , MK Stalin's consultation with DMK executives on assembly elections: Today he is meeting people from 6 districts
× RELATED உலக சாதனை படைத்த சிறுமி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு