×

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் அரசு பஸ்கள் விபத்தில் சிக்கியதில் 8,500க்கும் மேற்பட்டோர் பலி: டிரைவர்களுக்கு சிறப்பு பயிற்சி; தடுப்பு நடவடிக்கை அதிகரிக்க மக்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 2013ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு ஜனவரி வரையிலான 7 ஆண்டுகளில் அரசு பஸ்கள் விபத்தில் சிக்கியதில் 8,722 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள் சுமார் 2.15 கோடி, சரக்கு வாகனங்கள் 5.85 லட்சம் மற்றும் 24.7 லட்சம் கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இதனால் அனைத்து சாலைகளிலும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இத்தகைய வாகனங்களை இயக்கும் பலர், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, ஹெல்மெட் அணியாதது, குடிபோதையில் வாகனத்தை இயக்குவது, மொபைல் போன்களில் பேசிக்கொண்டு செல்வது, தடைசெய்யப்பட்ட வழித்தடத்தில் பயணிப்பது போன்றவையால் அதிக அளவில் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு நடக்கிறது.  

இதை கட்டுப்படுத்த, அரசு பல்வேறுவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இதில் அரசு பஸ்களும் அடங்கும். அதாவது, கடந்த 2013 முதல் 2020 ஜனவரி வரையிலான ஏழு ஆண்டுகளில் அரசு பஸ்கள் விபத்தில் சிக்கியதில் 8 ஆயிரத்து 722 பேர் உயிரிழந்துள்ளனர். இதை குறைக்கும் விதமாக போக்குவரத்துத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதாவது, ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்தல், விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து, அங்கு என்ன மாதிரியான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கை தயாரித்தல், பிறகு அதனைக் கொண்டு நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து சம்பந்தப்பட்ட சாலைகளை மேம்படுத்துதல், போக்குவரத்து தொடர்பான எச்சரிக்கை பலகைகளை அதிகம் விபத்து நடக்கும் இடத்தில் வைத்தல், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடத்தில் நெரிசலை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், தொடர்ந்து பணியில் ஈடுபடும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் நவீன தரத்துடன் ஓய்வு அறைகள் மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்தின்றி பணிபுரியும் அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி விபத்து இல்லாமல் பஸ்களை இயக்குவோருக்கு முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த 2013-14ம் ஆண்டில் 20 ஆயிரத்து 684 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், 1,187 விபத்துகள் நடந்தன. இதில் 1,318 பேர் உயிரிழந்தனர். தற்போது கடந்த 2019-20ம் ஆண்டில் 19 ஆயிரத்து 496 பஸ்கள் இயக்கப்படும் நிலையில், 739 விபத்துகள் ஏற்பட்டு 834 பேர் உயிரிழந்துள்ளனர். 2013-14ம் ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும் உயிரிழப்புகள் நடந்து வருவதால், விபத்தை மேலும் குறைக்க தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : government bus accidents ,Tamil Nadu ,drivers , More than 8,500 killed in government bus accidents in Tamil Nadu in last 7 years: Special training for drivers; Urging people to increase preventive action
× RELATED விமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது