மேம்பாலத்தில் பைக்கில் சறுக்கி விழுந்த வாலிபருக்கு உதவி செய்த போலீஸ் கமிஷனர்

சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலத்தில் பைக்கில் சறுக்கி விழுந்த வாலிபரை, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மீட்டு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று காலை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. மியூசிக் அகாடமி அருகே உள்ள மேம்பாலத்தில் கார் செல்லும் போது, எதிர் திசையில் பைக்கில் வந்த வாலிபர் மழை காரணமாக முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதினார். இதில், அவர் நிலை தடுமாறி பைக்குடன் சறுக்கி கீழே விழுந்தார்.

விபத்தை நேரில் பார்த்த போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தனது காரில் இருந்து இறங்கி கீழே விழுந்த வாலிபரை மீட்டார். பிறகு காரில் வைத்திருந்த முதல் உதவி பெட்டியை எடுத்து காயமடைந்த வாலிபருக்கு முதலுதவி செய்தார். பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து ராயப்பேட்டை போக்குவரத்து போலீசாரை அழைத்து,காயமடைந்த வாலிபரை மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தார். போலீஸ் கமிஷனரின் உதவியை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories:

>