திருவில்லிபுத்தூர் அருகே 2500 ஆண்டு பழமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே 2500 ஆண்டு பழமையான குத்துக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் குன்னூர் பகுதியில் பழமையான குத்துக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெடுங்கல் என்றும் அழைக்கப்படும் இக்குத்துக்கல் 20 அடி உயரம் கொண்டதாக உள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த ஒரு இனக்குழு தலைவனுக்காக எடுக்கப்பட்ட நினைவு சின்னமாகவோ அல்லது ஆநிரை கவர்தல் போரில் இறந்துபட்ட வீரனுக்கு எடுக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.

சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் முனியாண்டி என்ற பெயரில் இந்த குத்துக்கல்லை வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் குத்துக்கல் அதிகம் காணப்படும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் முதன்முதலாக குத்துக்கல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>