×

குடகனாற்றில் தண்ணீர் திறக்க கோரி வீடுகளில் 2ம் நாளாக கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

சின்னாளபட்டி: குடகனாற்றில் முறையாக தண்ணீர் திறந்து விட கோரி, அனுமந்தராயன்கோட்டை உட்பட 20 கிராமங்களில் விவசாயிகள் 2ம் நாளாக கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து குடகனாற்றில் உபரி நீரை திறந்துவிடுவது வழக்கம். கடந்த 5 வருடங்களாக சரிவர மழை பெய்யாததால் அணையிலிருந்து குடகனாற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கடந்த 2015ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா 110 விதியின் கீழ் ராஜவாய்க்கால் கட்டுவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

அப்போதைய பொதுப்பணித்துறை அதிகாரிகள், கன்னிமார் அருகே குடகனாற்றுக்கு தண்ணீர் திறந்து விடும் பகுதியை கான்கிரீட் கலவையால் அடைத்தனர். இதனால் குடகனாற்றுக்கு தண்ணீர் வராமல் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குடகனாறு பாசன விவசாயிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கையையேற்று, 15 தினங்களுக்கு முன்பு குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு வேடசந்தூர் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பாலம்ராஜக்காப்பட்டியையடுத்து குடகனாற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இதனால் பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குடகனாறு பாசன விவசாயிகள், குடகனாற்றில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும், அதிமுக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட அனுமந்தராயன்கோட்டை, பொன்னிமாந்துரை உள்ளிட்ட 20 கிராமங்களில் வீடுகளில் நேற்று கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். 2ம் நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.



Tags : protest ,houses , Black flag protest for 2nd day in houses demanding to open water in Kodakanar
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!