×

தூத்துக்குடி அருகே பயங்கரம்; பெயின்டர் வெட்டிக் கொலை: முன்விரோதத்தில் தீர்த்துக்கட்டினார்களா? போலீஸ் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே காட்டு பகுதியில் பெயின்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். முன்விரோதத்தில் அவரை தீர்த்துக்கட்டினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மீளவிட்டான் அருகே உள்ள பண்டாரம்பட்டி காட்டு பகுதியில் காலியிடம் உள்ளது. இங்கு அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இன்று காலை அங்குள்ள முள்காட்டில் வாலிபர் உடல் கிடப்பதாக சிப்காட் போலீசுக்கு தகவல் கிடைத்தது. ரூரல் டிஎஸ்பி பொன்னரசு, சிப்காட் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன், சப்இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர், உடலில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் அருகில் காலி மதுபாட்டில் மற்றும் புரோட்டா வாங்கி சாப்பிட்டதற்கான பார்சல் பேப்பர் ஆகியவை சிதறி கிடந்தன. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு தெற்கு நோக்கி சென்று தூத்துக்குடி செல்லும் ரோடு வரை வந்து நின்று விட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலையானவர்,

தூத்துக்குடி கணேஷ் நகரைச் சேர்ந்த பெயின்டர் கதிரேசன் (35) என்பது தெரிய வந்துள்ளது. அவர் எதற்காக இங்கு வந்தார். அவரை அழைத்து வந்தவர்கள் யார், முன்விரோதம் காரணமாக மது வாங்கி கொடுத்து தீர்த்துக்கட்டினார்களா அல்லது பெண் தகராறு காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் மூலம் விசாரணை
கொலையான பெயின்டர் கதிரேசன் உடல் அருகே அவரது செல்போன் கிடந்தது. போலீசார் அதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யார், யாருடன் எல்லாம் போனில் பேசியுள்ளார். அவரை யாராவது போனில் பேசி அழைத்து வரவழைத்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Tags : Thoothukudi ,murder ,Painter ,Police investigation , Terror near Thoothukudi; Painter's murder: Were they settled in the antecedents? Police investigation
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...