பனாஜி:-கோவாவின் துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கரின் செல்போனிலிருந்து ஆபாச வீடியோ ஒன்று நேற்று அதிகாலை 1.20 மணிக்கு ‘VILLAGES OF GOA’ என்ற வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மகளிர் காவல் நிலையத்தில் கோவா முன்னணி கட்சியின் மகிளா பிரிவினர் புகார் அளித்தனர். அதில், துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி வற்புறுத்தி உள்ளனர். இதுகுறித்து துணை முதல்வர் சந்த்ரகாந்த் கூறுகையில், ‘வாட்ஸ் அப்பில் வெளியான ஆபாச வீடியோ, ஹேக்கர்களின் வேலை. இதுதொடர்பாக கோவா சைபர் பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளேன்.
அந்த வீடியோ பகிரப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் நானும் உறுப்பினராக உள்ளேன். எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இதை விஷமிகள் சிலர் செய்துள்ளனர். அந்த வீடியோ பகிரப்பட்ட நேரத்தில் நான் எனது போனை பயன்படுத்தவே இல்லை. அப்போது நான் உறக்கத்தில் இருந்தேன். பொது மக்கள் மத்தியில் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும்’ என்றார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற சந்த்ரகாந்த் காவ்லேக்கர், பாஜக-வில் இணைந்த பத்து எம்எல்ஏக்களில் ஒருவர். மிகவும் பிரபலமான அரசியல்வாதி என்பதால், அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.