×

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு திட்டம்: ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்

சென்னை: கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கை அடுத்து கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இந்த மாதம் 31-ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில் பேருந்துகள் இயக்கம், கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு என பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் கல்வி நிறுவனங்கள் திறக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் +2 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதால் அதற்கான தேதியை நிர்ணயம் செய்வதோடு அவர்களுக்கு உரிய பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் முறையான முன்னெச்செரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கி உள்ள மத்திய அரசு,

இது குறித்து மாநில அரசுகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனையடுத்து உத்தரப்பிரதேசம், புதுச்சேரி, ஹரியானா சிக்கிம் உள்பட சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த பின்னணியில் பள்ளிகள் திறப்பு குறித்த வழக்கு ஒன்றில் தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வாய்ப்பு உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம், அரசின் முடிவு குறித்து அடுத்த மாதம் 11-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த கல்வி வட்டாரங்கள், கடந்த மாதம் நடைபெற இருந்த காலாண்டு தேர்வை ரத்து செய்தது போல அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய முடிவு எடுத்ததாக கூறின. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் பண்டிகை காலம் என்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என மத்திய அரசு எச்சரித்திருப்பதால் அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய அதிகாரிகள் பரிந்துரைத்திருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்த முறையான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் அவை கூறின.



Tags : Government ,examination ,Tamil Nadu ,announcement , Government of Tamil Nadu plans to cancel mid-term examination: Official announcement in one or two days
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...