போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகைகளை ஜாமீனில் விடுதலை செய்யகோரி நீதிபதி்க்கு கொலை மிரட்டல் கடிதம்

பெங்களூரு,:போதை பொருள் மாபியா கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகைகளை ஜாமீனில் செய்யவில்லை என்றால் வெடிகுண்டு வைப்பதாக மிரட்டல் விட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.போதை பொருள் விற்பனை புகார் கர்நாடகாவில் நாளுக்கு நாள் புது புது திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. போதை பொருள் மாபியா கும்பலுடன் கன்னட திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்பில் உள்ளதாக பத்திரிக்கையாளரும் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் புகார் கொடுத்தார். அதனிடிப்படையில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சந்தீப்பாட்டீல் தலைமையிலான போலீஸ் படையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் சிவசங்கர் என்பரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் நடிகைகள் சஞ்சனா, ராகிணி உள்பட 9 பேரை இதுவரை கைது செய்து விசாரணை நடத்தியபின் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதால் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் மகன் உள்பட வழக்கில் தொடர்பில் உள்ள பலரை கைது செய்ய தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் தங்களிடம் நடத்தியுள்ள விசாரணை முடிந்துள்ளதால், தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் பெங்களூரு சிடடி சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனு மீதான விசாரணையின் போது, போதை பொருள் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளவர்களுக்கு சர்வதேச அளவில் இயங்கி வரும் போதை பொருள் மாபியா கும்பல்களுடன் தொடர்பு உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சமயத்தில் குற்றவாளிகளை ஜாமீனில் விடுதலை செய்தால், வழக்கில் சாட்சிகளை கலைத்து திசை திருப்பி விட அதிகம் வாய்ப்புள்ளது. மேலும் மனுதாரர்கள் (நடிகைகளுக்கு) பண பலத்துடன் அரசியல் செல்வாக்கும் இருப்பதால், இந்த வழ்ககை சீர்குலைத்து விடுவார்கள். உண்மையான குற்றவாளிகளை சமூகத்தின் முன் அடையாளம் காட்டி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டிய பொறுப்பு போலீசாருக்கு உள்ளதால், ஜாமீனில் விடுதலை செய்யக்கூடாது என்று சிசிபி தரப்பில் ஆஜரான வக்கீல் பலமாக வாதம் செய்துள்ளார்.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஜி.எம்.சீனப்பாவின் வீட்டிற்கு நேற்று பார்சல் வந்தது. அதை பிரித்து பார்த்தபோது, போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி பெங்களூரு காவல்பைரசந்திராவில் நடந்த கலவரத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளவர்களையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் . அப்படி விடுதலை செய்யவில்லை என்றால், உங்கள் (நீதிபதி) காரை வெடி வைத்து தகர்ப்போம் என்று கூறியிருந்தனர். கடிதத்துடன் வெடிகுண்டுக்கு பயன்படுத்தும் டெடனேட்டர் ஒயரும் வைத்திருந்தனர். அதே கடிதத்தில் மாநகர போலீஸ் கமல்பந்த், சிசிபி இணை போலீஸ் கமிஷனர்கள் சந்தீப்பாட்டீல் மற்றும் ரவிகுமார் ஆகியோரின் பெயரையும் குறிப்பிட்டு மிரட்டி இருந்தனர்.

அந்த கடிதம் படித்ததும் அதிர்ச்சியடைந்த நீதிபதி சீனப்பா உடனடியாக தனது உதவியாளர் மூலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் மோப்ப நாயுடன்  போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். மேலும் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நீதிபதிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் விட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்தகொலை மிரட்டல் தொடர்பாக பெங்களூரு அல்சூர் கேட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல் விட்டவர்களுக்கும் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகைகளுக்கும் என்ன தொடர்பு. மேலும் போதை பொருள் வழக்குடன் பெங்களூரு காவல் பைரசந்திரா வழக்கை தொடர்பு படுத்தியுள்ளதற்கு என்ன காரணம் ? இதன் பின்னணியில் யார் யார் உள்ளார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை முடக்கி விட்டுள்ளனர்.

இது குறித்து உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் கேட்டபோது, நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விட்டுள்ளவர்களை கைது செய்வதற்கான முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியை மேற்கொள்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்கப்படும். கொலை மிரட்டல் விட்டுள்ள சமூக விரோதிகளை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்படும். இது தொடர்பாக இன்று மாநில போலீஸ் ஐஜி மற்றும் டிஜிபி, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

Related Stories:

>