×

மருங்குளம் கொள்முதல் நிலையத்தில் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்

தஞ்சை: மருங்குளம் நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியாமல் 15,000 நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை பணி 95 சதவீதம் முடிந்துள்ளது. அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தினம்தோறும் கொள்முதல் நிலையங்களில் இரவு பகலாக காத்திருக்கின்றனர். தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்கள் மழைநீரில் நனைந்து ஈரப்பதம் அதிமாகியுள்ளது. இதனால் நெல்களை மீண்டும் வெயிலில் உலர்த்தி ஈரப்பதத்தை குறைத்து மிஷினில் தூசி இல்லாமல் தூற்றி விற்பனை செய்ய கால தாமதமாகிறது. இதனால் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் நாளொன்றுக்கு 400 மூட்டைகள் கூட கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தினம்தோறும் ரூ.2,000 செலவாகிறது.

இதேபோல் பருத்திக்கோட்டை, பரிதியப்பர்கோவில், கொல்லங்கரை, கோவிலூர், தென்னமநாடு, சேதுராயன்குடிக்காடு உள்ளிட்ட பலவேறு கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் 20 நாட்களுக்கு மேலாக தேங்கியுள்ளது. விவசாயிகள் பகல் நேரங்களில் நெல்மணிகளை வெயிலில் உலர்த்தி மீண்டும் இரவு நேரத்தில் நெல் குவியல்கள் மீது படுதாவை மூடினாலும் அவ்வப்போது மழை பெய்வதால் மழைநீரில் நனைந்து நெல்கள் முளைக்கும் நிலை உள்ளது.
ஏக்கருக்கு ரூ.25,000 வரை செலவு செய்து அறுவடைசெய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளதுடன் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மானாவாரி பகுதி விவசாயிகள் சங்க செயலாளர் வைத்திலிங்கம் கூறுகையில், பம்ப்ஷெட் மூலம் சாகுபடி செய்த நெல்லை மருங்குளம், கொல்லங்கரை கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக கொட்டி வைத்துள்ளோம். 20 நாட்களாக நெல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 400 மூட்டைகள் கூட கொள்முதல் செய்ய முடியாமல் உள்ளது. கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் இருந்து எடுத்து செல்லாததால் பணியாளர்கள் கொள்முதல் செய்ய தயங்குகின்றனர்.

மருங்குளம் கொள்முதல் நிலையத்தில் நெல்கள் கொட்ட கூட இடமில்லாத வகையில் 15,000 மூட்டை நெல் தேங்கியுள்ளது. இனிவரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்தால் இப்பகுதியில் அறுவடை செய்த அனைத்து நெல் மூட்டைகளிலும் நாற்றுகள் முளைத்து வீணாகி விடும். எனவே உடனடியாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாக்க உடனடியாக கொண்டு செல்ல வேண்டும், தற்போது விற்பனைகாக வைத்துள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க ஷெட் அமைக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து கொள்முதல் பணியாளர்கள் கூறுகையில், மாலை, இரவு நேரங்களில் பலத்த மழை பெய்கிறது, இதனால் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது. எனவே நெல்களை வெயிலில் உலர்த்தி 17 சதம் ஈரப்பதம் இருந்தால் தான் கொள்முதல் செய்கிறோம். கூடுதலாக கொள்முதல் செய்தால் அதனால் ஏற்படும் இழப்புகளை பணியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. இதை தவிர்ப்பதால் கொள்முதல் செய்வதில் காலதாமதமாகிறது. அதே நேரத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திலிருந்து சேமிப்பு கிடங்குக்கு எடுத்து செல்ல லாரிக்கு கூடுதலாக ரூ.5,000 வரை கேட்கின்றனர். எனவே கூடுதலாக பணம் கேட்பதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவுக்கு கொண்டு வந்தால் தான் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு குறையும். கூடுதலாக பணம் கேட்பது குறித்து அதிகாரிகளை கொண்டு ரகசியமாக விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளியில் வரும் என்றனர்.

Tags : procurement center ,Marungulam , Paddy bundles, Tanjore
× RELATED பால் கொள்முதல் மையம் துவக்கம்