பயனற்று குப்பைகள் இருப்பிடமான அவலம்: தள்ளுவண்டி கடைகளால் மாயமான பயணியர் நிழற்குடை

வேப்பூர்: கடலூர் மாவட்டத்தின் வேப்பூர் பகுதி சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. நாள்தோறும் இவ்வழியே ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. வேப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சேப்பாக்கம், அடரி, நல்லூர், சிறுப்பாக்கம், கழுதூர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கும் நாள்தோறும் வேப்பூருக்கு வந்து செல்கின்றனர்.

வேப்பூர் கூட்ரோடு சேலம் மார்க்கத்தில் உள்ள பயணியர் நிழற்குடை 2015-16ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த பயணியர் நிழற்குடையில் ஆத்தூர், சேலம், கோயம்புத்தூர் உள்ள பகுதிகளுக்கு செல்லும் புறநகர் பேருந்துகளும், காட்டுமைலூர், அடரி, பெரிநெசலூர், சிறுப்பாக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் நகரப்பேருந்துகளும் நின்று செல்வது வழக்கம்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சாலையோர தள்ளுவண்டி கடைகளால் இந்த பயணியர் நிழற்குடை முழுவதும் மறைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் இந்த பயணியர் நிழற்குடை பயன்பாடின்றி கிடக்கிறது. நிழற்குடை தள்ளுவண்டி கடைகளால் மறைக்கப்பட்டுள்ளதால் பேருந்து ஓட்டுநர்களுக்கு பயணியர் நிழற்குடை இருப்பது தெரியாமல் அந்த நிறுத்தத்திற்கு 50மீட்டருக்கு முன்னரே கூட்ரோட்டு சாலையிலே பேருந்துகளை நிறுத்துகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பயணியர் நிழற்குடை முழுவதும் பயன்பாடு இல்லாமல் இருப்பதால் குப்பைகள் சூழ்ந்து அசுத்தமாக உள்ளது. பயணிகள் அமர்வதற்கும் பயனற்ற நிலையில் உள்ளது.

எனவே பயணியர் நிழற்குடை முன்புறம் உள்ள கடைகளை அப்புறப்படுத்தி விட்டு இந்த பயணியர் நிழற்குடையில் பேருந்துகளை நிறுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: