×

சின்னக்குன்னூர் பகுதியில் மர்மமான முறையில் இறந்த யானையை புதைத்த 3 பேர் கைது

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள சின்னக்குன்னூர் பகுதியில் யானையை புதைத்த 3 பேரை போலீசார் வனத்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் சின்னகுன்னூர், எப்பநாடு உள்ளிட்டவை சீகூர் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களாகும். இங்கு மலை காய்கறிகள் மற்றும் சைனீஷ் வகை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. வனத்தை ஒட்டியுள்ள நிலையில், வன விலங்குகளின் தொல்லை அதிகமாக காணப்படும். குறிப்பாக சீகூர் வனங்களில் உள்ள காட்டு யானைகள் இப்பகுதிக்கு வருகின்றன. கோடை காலங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை தின்றும், மிதித்தும் சேதம் விளைவிப்பது வழக்கம்.

நேற்று வனத்துறையினர் சின்னக்குன்னூர் வனப்பகுதிகளில் ரோந்து சென்றபோது, தனியார் நிலத்தில் யானை ஒன்றை புதைத்ததாக தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட தனியார் இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மண் குவியல் காணப்பட்ட இடத்தில் தோண்டி பார்த்தபோது, அங்கு யானை புதைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பெந்தட்டி அருகேயுள்ள பெந்தூர் கிராமத்தை விக்னேஷ்வரன் (40), கோபாலகிருஷ்ணன் (20), அஜித்குமார் (18) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர்கள் யானையை புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: ‘‘சீகூர் வனத்திற்குட்பட்ட சின்னக்குன்னூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இறந்த யானையை, வனத்துறையினருக்கு தெரிவிக்காமல் புதைத்துள்ளதால் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இறந்த யானைக்கு சுமார் 20 வயது இருக்கும். யானையின் தந்தம் நல்ல நிலையில் உள்ளது. எனவே, இதனை வேட்டையாடி கொல்ல வாய்ப்பில்லை. மின் வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம். இது வெளியில் தெரிந்தால், தங்களை வனத்துறையினர் கைது செய்வார்கள் என பயந்து, தனியார் நிலத்தை சேர்ந்தவர்கள் புதைத்துள்ளனர். நாளை (இன்று) பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னரே யானை இறப்பு குறித்த விவரம் தெரிய வரும்’’ என்றார்.

Tags : area ,Chinnakunnur , Elephant, Chinnakunnur
× RELATED மின்வேலியில் சிக்கி யானை பலி