×

தமிழகத்தில் ஆயுதபூஜைக்கே திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் : முதல்வர் பழனிசாமியிடம் திரையரங்கு உரிமையாளர்கள் மனு

சென்னை : மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்துளள்னர். கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறைப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் படங்களை வெளியிடமுடியாத சூழல் நிலவுகிறது.

இதனால் பல தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் சிக்கியுள்ளனர். படங்களுக்காக வாங்கிய கடன்களின் வட்டி உயர்ந்து வருகிறது. திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் படங்கள் வெளியான பின்னரே நிலைமை சரியாகும். அதே சமயம் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது சிறிய பட்ஜெட் படங்கள் வசூல் செய்ய தடுமாறும் என்ற சூழலும் உள்ளது. மேலும் திரையரங்குகள் திறக்கப்படாததால் அதன் உரிமையாளர்கள், அதில் பணியாற்றும் ஊழியர்கள் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தோர் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழக திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலும் இங்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழக
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தனர். சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் அமைந்துள்ள கேம்ப் அலுவலகத்தில் 11 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பன்னீர் செல்வம், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் ஆயுதபூஜைக்கே (அக்டோபர் 25 வரும் ஞாயிற்றுக்கிழமை) தியேட்டர்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்தனர்.அதில் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் என்பதற்கு பதிலாக கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தியேட்டர்களை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும், உரிமம் பெற பொதுப்பணித்துறை  இடமே அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு தமிழக அரசு என்ன முடிவு எடுக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags : Theater owners ,Palanisamy ,opening ,theaters ,Tamil Nadu , Tamil Nadu, Ayudha Pooja, Theater, Chief Minister Palanisamy, Theater Owners, Petition
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...