×

முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று ‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினார்

சென்னை: இலங்கை அணி கிரிக்கெட் வீரர் முத்தையா  முரளிதரன். இலங்கை வாழ் மலையகத் தமிழரான இவர் இலங்கை கிரிக்கெட் அணியில்  இடம் பிடித்தது, உலகின் சிறந்த பவுலராக விளங்கியது ஆகியவற்றை மையப்படுத்தி  தமிழில் 800 என்ற படம் தயாராகிறது. இதில் முத்தையா முரளிதரன் கேரக்டரில்  விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் முத்தையா முரளிதரன்  இலங்கை அரசுக்கு ஆதரவானவர், அவரது வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க  கூடாது என்று சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ‘நான் தமிழர்களுக்கு  எதிரானவன் என்பது போல குற்றம்சாட்டுகிறார்கள். நான் இனப்படுகொலையை  ஆதரிக்கவில்லை’ என்று முத்தையா முரளிதரனும், இது அரசியல் படம் அல்ல.  கிரிக்கெட் விளையாட்டை பற்றியது மட்டும் என்று தயாரிப்பு நிறுவனமும்  விளக்கம் அளித்தது.

இதற்கிடையே இலங்கை ஊடகம் ஒன்றுக்கு நேற்று முன்தினம் பேட்டியளித்த விஜய் சேதுபதி, ‘800 படத்திலிருந்து விலக மாட்டேன். இந்த படம் வெளிவந்தால் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்’ என தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில் முத்தையா முரளிதரன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர்  கூறியிருப்பதாவது: என்‌  மீதுள்ள தவறான புரிதலால்‌ 800 படத்திலிருந்து விலக  வேண்டும்‌ என நடிகர்‌  விஜய்‌ சேதுபதிக்கு சில தரப்பில்‌ இருந்து  கடுமையான அழுத்தம்‌ தருவதை அறிகிறேன்‌. எனவே, என்னால்‌  தமிழ்‌நாட்டின்‌ ஒரு தலைசிறந்த கலைஞன்‌  பாதிப்படைவதை நான்‌ விரும்பவில்லை.  அது மட்டுமல்லாது விஜய்‌ சேதுபதியின்‌  கலைப் பயணத்தில்‌ வருங்காலங்களில்‌  தேவையற்ற தடைகள்‌ எற்பட்டுவிடக்கூடாது  என்பதையும்‌ கருத்தில்‌ கொண்டு  இத்திரைப்படத்தில்‌ இருந்து விலகிக்‌  கொள்ளுமாறு அவரைக்  கேட்டுக்கொள்கிறேன்‌.

படத்துக்கான தடைகளை கடந்து இந்தப் படைப்பை ரசிகர்களிடத்தில்‌ பட நிறுவனம் கொண்டு   சேர்ப்பார்கள்‌ என நம்புகிறேன்‌. இதற்கான அறிவிப்பு விரைவில்‌ வரும்‌ என   தயாரிப்பு நிறுவனம்‌ என்னிடம்‌ உறுதி அளித்துள்ள நிலையில்‌, அவர்கள்‌   எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளுக்கும்‌ உறுதுணையாக இருப்பேன்‌ என்பதையும்‌   தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இவ்வாறு முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.  முரளிதரனின் இந்த அறிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஜய் சேதுபதி, ‘நன்றி, வணக்கம்’ என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

எல்லாம் முடிந்துவிட்டதாக அர்த்தம்
நேற்று மாலை முதல்வரின் வீட்டுக்கு வந்த விஜய் சேதுபதியிடம் நிருபர்கள், டிவிட்டரில் ‘நன்றி, வணக்கம் என போட்டுள்ளீர்களே இதற்கு என்ன அர்த்தம்’ என கேட்டனர். அதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி, ‘எல்லாம் முடிந்துவிட்டதாக அர்த்தம். இனி 800 படத்தை பற்றி பேச எதுவும் இல்லை’ என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

Tags : Vijay Sethupathi ,Muralitharan , Vijay Sethupathi withdrew from '800' at Muralitharan's request
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்