×

தண்டலம் சத்திரன் குட்டை ஆக்கிரமிப்பு: குடிமராமத்து பணி செய்வதில் சிக்கல்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த குளம் அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதரமாக இருந்தது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த் குளம் பராமரிப்பின்றி பாழானது. இதனையடுத்து இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ. 4 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், சத்திரன் குட்டையின் கரைகளை பலப்படுத்தும் வகையில் கரைகளில் இருந்த மிட்புதர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வந்தது.

தற்போது சத்திரன் குட்டையின் கரைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஒருசிலர் பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் குளம் சீரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது; தண்டலம் கிராமத்தில் உள்ள சந்திரன் குளம் உள்ளது. இந்த குளம் கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கபடாமல் பாழடைந்து காணப்பட்டது. இதனைபயன்படுத்தி குளத்தை சுற்றி அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த குளத்தை சீரமைக்க குடிமராமத்து பணிகளின் கீழ் ரூ .4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினர் முன்வராததால், குளம் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறையினருக்கு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று பல முறை மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்களால் குளம் சீரமைப்பு பணியை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Occupancy of Tandalam Chattaran Kuttai: Problem in doing civil work
× RELATED 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஸ்ரீ...