வாகனசோதனையின்போது தலைமை காவலரை கொல்ல முயற்சி: ரவுடி கைது; திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வாகனசோதனையின்போது தலைமை காவலரை கொலை செய்ய முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த மப்பேடு காவல் நிலைய தலைமை காவலர் நீலமேகம் மற்றும் காவலர் சிவபாலன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் பஜாரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடம்பத்தூரிலிருந்து பேரம்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த நபரை வழிமறித்தனர். அப்போது, அவர் பைக்கை நிறுத்தாமல் போலீசார் மீது மோத வந்துள்ளார். மேலும் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி தலைமை காவலர் நீலமேகத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டி கத்தியால் அவரின் தலையின் மீது வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் சற்று விலகியதால் உயிர் தப்பினார். பின்னர் தான் பெரிய ரவுடி என்றும் தகாத வார்த்தைகளால் திட்டியும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து தலைமை காவலர் நீலமேகம் மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். மாவட்ட போலீஸ் எஸ்.பி அரவிந்தன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி துரைபாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணையா தலைமை காவலர் நீலமேகத்தை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சென்னை வியாசர்பாடி எம்.எம்.கார்டனை சேர்ந்த விக்னேஷ் (எ) டியோ விக்னேஷ்(23) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் அவர் அகரம் பொன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் மப்பேடு போலீஸ் எல்லையில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் ஆடுகளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அவரிடமிருந்து 20 ஆடுகள் மீட்கப்பட்டது. பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>