×

கடம்பத்தூரில் திட்ட காலம் முடிந்தும் மந்தகதியில் ரயில்வே மேம்பால பணி: விரைந்து முடிக்க கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் திட்ட காலம் முடிந்தும் ரயில்வே மேம்பால பணிகள் இழுபறியாகி வருகிறது. திருவள்ளூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள கடம்பத்தூரில் ரூ.14.5 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. அதில், நெடுஞ்சாலை பகுதியில் 25 பில்லர்கள், ரயில்வே பகுதியில் நான்கு பில்லர்கள் என மொத்தம் 29 பில்லர்கள்  அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின.
இந்நிலையில், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் ரயில்வே கேட் வரை பில்லர்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. இதேபோல், கசவநல்லாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலிருந்து துவங்கப்பட்ட மேம்பால பணிகள் ரயில்வே கேட் வரை நிறைவடைந்துள்ளது. இருபுறமும் உள்ள ரயில்வே கேட்களின் இடையே உள்ள ரயில்வே பகுதியில் பாலத்துக்கான பில்லர் அமைக்கும் பணி நடைபெறாமல் நிலுவையில் உள்ளது.

இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “பாலம் பணிகள் துவங்கி 18 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டம் நிறைவு செய்ய வேண்டிய காலம் முடிந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், பெரும்பாலான பணிகள் இன்னும் நடைபெறவில்லை. நகரின் மையப்பகுதியில் பணி நடப்பதால், பல்வேறு வகையில் மக்களுக்கு அவதி ஏற்படுகிறது. எனவே, குறித்த காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனினும், மற்ற பாலம் பணிகளை போலவே, ரயில்வே மேம்பால பணியும் இழுத்தடிக்கப்பட்டு வருவது, மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. எனவே, கடம்பத்தூரில் மேம்பால பணியை விரைந்து முடிக்க, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Tags : completion , Railway overpass work in Kadambathur on completion of project period: Demand for speedy completion
× RELATED பாலக்காட்டில் எம்பி தொகுதி நிதி ரூ.2.26...