×

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு: சட்ட விரோதமில்லை என ரிசர்வ் வங்கி பதில் மனு

சென்னை: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்தை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த பழமையான கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இதற்கிடையில், இந்த இரு மனுக்களையும் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கோரி ரிசர்வ் வங்கி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடும் கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் இந்த சட்டம் அமலுக்கு வரவுள்ளது. கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்த ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமான சட்டங்கள் உள்ளதால், வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதால், இதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. மோசமான நிதி நிலை காரணமாக நாடு முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் 430 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் டிசம்பர் 4ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : banks ,Reserve Bank ,I-Court , Co-operative banks under the control of the Reserve Bank of India have filed a case in the I-Court against the Central Government's law: the Reserve Bank's reply petition is not illegal.
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...