×

நடிகர், நடிகைகள் 30 சதவீதம் சம்பளத்தை குறைக்க வேண்டும்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்

சென்னை: நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை:
கொரோனா காலத்தில் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட படங்களால் தயாரிப்பாளர்களுக்கு 50 சதவீதம் நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின் இந்த கடினமான சூழ்நிலையை உணர்ந்து, ஏற்கனவே சில நடிகர்கள் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்ட சம்பளத்திலிருந்து 30 சதவீதம் குறைத்து கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள். அவர்களை பாராட்டும் இந்ததருணத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கடமை. தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத்துறையில் அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தாமே முன்வந்து தங்களின் சம்பளத்தில் 30 முதல் 50 சதவீதத்தை விட்டுகொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இது நடக்க வேண்டாமா?

எல்லோரையும் கேட்கவில்லை. ரூபாய் பத்து லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைந்த பட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக் கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்து தருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன். இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. அது நீங்கள் உங்கள் சம்பளத்தை பேசி ஒத்து வந்தால் வேலை செய்யப் போகிறீர்கள். ஆனால், முடிவடைய வேண்டிய படங்களுக்கு உங்கள் பங்களிப்பைக் கொடுத்து 30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து சினிமா உலகம் மீண்டெழ உதவ கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Actors ,actresses ,Current Producers Association , Actors and actresses should have their salaries cut by 30 per cent: Current Producers Association appeals
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி