×

போர் பதற்றம் நிலவும் சூழலில் லடாக்கில் எல்லை தாண்டிய சீன வீரர் கைது: தெரியாமல் வந்ததால் மன்னித்து விடுவிப்பு

புதுடெல்லி: இந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு எல்லை தாண்டி சீன வீரர் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை இந்திய ராணுவம் கைது செய்து விசாரித்தது. வழிதெரியாமல் அவர் வந்ததால், அவரை மன்னித்து மீண்டும் சீன ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார். கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இந்தியா-சீனா இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால் டெம்சோக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா, சீனா தரப்பில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், கிழக்கு லடாக்கின் டெம்சோக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை கடந்த சீன ராணுவ வீரர் வாங் யா லாங் இந்திய ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.  

இது குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ``மலைப் பகுதி என்பதால் கடுங்குளிரினால் அதிகம் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. அவருக்கு தேவையான ஆக்சிஜன், உணவு, குளிரை தாங்கும் உடைகள் கொடுக்கப்பட்டது. காணாமல் போன ராணுவ வீரரைப் பற்றி சீன அரசு வெளியிட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றன. ஏற்கனவே நடைமுறையில் உள்ள உடன்படிக்கைகளின்படி, வழக்கமான சம்பிரதாயங்கள் முடிக்கப்பட்ட பிறகு, அவர் சுசூல்-மால்டோ சந்திப்பில் சீன ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்,’’ என்று கூறப்பட்டுள்ளது. அவரிடம் எப்படி எல்லையைக் கடந்து வந்தார் என்பது குறித்து இந்திய ராணுவத்தினர் விசாரணை நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : soldier ,Chinese ,Ladakh , Chinese soldier arrested for crossing border in Ladakh amid war tensions
× RELATED மோடியின் சீன உத்தரவாதம் லடாக் மக்களுக்கு துரோகம்: கார்கே சாடல்