×

தெலங்கானாவை தொடர்ந்து கர்நாடகாவில் கொட்டியது கனமழை: நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது

பெங்களூரு: தெலங்கானாவைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஐதராபாத் நகரமே வெள்ள நீரில் மூழ்கி உள்ளது. பல ஆறுகள் நிரம்பி கரைகள் உடைந்ததால், நகரத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் கடந்த 10 நாட்களாக கடலோர பகுதியில் உள்ள தென்கனரா, உடுப்பி, கார்வார் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்கனரா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளது.

மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஹெக்டேரில் விவசாய பயிர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மலைநாடு பகுதியில் உள்ள ஹாசன், ஷிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை ஆர்ப்பரிக்க தொடங்கியுள்ளது. இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையால் வீடுகளை இழந்துள்ளவர்கள் பராமரிப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளம் சூழ்ந்து வெளியில் வராமல் இருப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, கர்நாடக பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீர்கள், போலீசார் ஈடுப்படுகிறார்கள். மாவட்ட கலெக்டர்கள் தங்களிடம் வைத்துள்ள நிதியை முழுமையாக வெள்ள நிவாரண மீட்பு பணிக்கு பயன்படுத்தி கொள்ளும்படி முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சேத விவரங்களை மாநில வருவாய்த்துறை கணக்கெடுத்துள்ளது. இதில் மழையால் ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* பலி 70 ஆக உயர்வு
தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்க்கிறது. இந்த மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 70 ஆக உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த 1908க்கு பிறகு பதிவான இரண்டாவது மிகப் பெரிய கனமழையாகும். இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 37,000க்கு மேற்பட்டோர் வேறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Hundreds ,Karnataka ,Telangana ,villages , Heavy rains lash Karnataka after Telangana: Hundreds of villages flooded
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...