×

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறாது: துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி

கும்பகோணம்: மூத்த தலைவர்கள், இளைஞர்களிடையே போட்டி நிலவும் நிலையில், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் எம்பியுமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நகரும் நியாய விலைக்கடை துவக்க விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்பி அளித்த பேட்டி: தஞ்சை மாவட்டத்தில் 147 நகரும் நியாயவிலை கடைகள் துவக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு இடஒதுக்கீடு சம்பந்தமாக கவர்னரின் ஒப்புதலுக்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். நெல் கொள்முதல் நிலையங்களில் 1,000 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்வதாக இருந்தால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். தேங்கியுள்ள நெல் மூட்டைகளை கொள்முதலுக்கு துரிதமாக எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கினால் தவறு. அவ்வாறு வாங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைத்திலிங்கம், இந்த கருத்து பற்றி எனக்கு தெரியாது. இந்த எண்ணம் எனக்கும் கிடையாது. மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து அதிமுக முடிவு எடுக்கவில்லை என்றார். அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்க, பிரதமர் மோடி முடிவெடுத்தார். அதில் தனது மகன் ரவீந்திரநாத்குமாருக்கு வழங்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்தினார்.

அதே நேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, மூத்த தலைவராக உள்ள வைத்திலிங்கத்துக்கு தான் மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினார். இரு தரப்பினரும் விடாப்பிடியாக இருந்தனர். இதில் ஒருவருக்கு தான் அமைச்சர் பதவி வழங்க முடியும் என்பதால் இருவருக்குமே வழங்காமல் விட்டு விட்டனர். இந்நிலையில் தற்போது கே.பி.முனுசாமி, தம்பித்துரை ஆகியோரும் எம்பிக்களாகி விட்டனர். இதனால் தற்போது மத்திய அமைச்சர் பதவியை அதிமுகவுக்கு வழங்க பாஜ முடிவு செய்தது.

இதற்கான தகவலையும் கூறியது. இதனால் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தம்பிதுரை, ரவீந்திரநாத்ஆகிய 4 பேருமே மத்திய அமைச்சர் பதவியை விரும்புவதால் அதிமுகவில் மீண்டும் மோதல் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதில் கே.பி.முனுசாமி, தம்பித்துரை ஆகியோர் எடப்பாடி பழனிசாமி அணியிலும், வைத்திலிங்கம், ரவீந்திரநாத்குமார் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் அணியிலும் உள்ளனர். இதனால் இந்த முறை அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.

பீகார் தேர்தலுக்கு பிறகு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படவுள்ளது. இதனால் அமைச்சரவையில் தங்களது ஆதரவாளர்களில் ஒருவருக்கு வழங்க எடப்பாடி பழனிசாமியும், தனது மகனுக்கு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும் விரும்பினர். ஆனால் இரு பதவி வழங்க முடியாது என்பதால் பாஜக குழப்பத்தில் இருந்தது. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்பியுமான வைத்திலிங்கம் அறிவித்துள்ளது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : AIADMK ,Vaithilingam ,Union Cabinet , AIADMK will not get a seat in the Union Cabinet: Interview with Deputy Co-ordinator Vaithilingam
× RELATED கட்சி மேலிடம் வேட்பாளரை அறிவிக்காத...