×

குமரியில் கட்டுமான பொருள் விலை உயர்வு: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு

மார்த்தாண்டம்: கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். இருப்பினும் பாதிப்பில் இருந்து தொழில் நிறுவனங்கள் இன்னும் மீளவில்லை. குறிப்பாக கட்டுமானத்துறை மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது. ஊரடங்குக்கு பிறகு கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் தொழிலை முடக்கி வைத்துள்ளது. புதிதாக வீடு, கடை உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டும் திட்டத்தை உரிமையாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். விலையேற்றம் காரணமாக ஊரடங்குக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தற்போது கட்டுமான பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே ஒப்பந்தக்காரர்கள் தொடங்கிய கட்டுமான பணிகளையும் பாதியிலேயே நிறுத்தி உள்ளனர். ஊரடங்குக்கு முன்பு ரூ.5.20 என விற்பனையான செங்கல் தற்போது ரூ.6.30 என உயர்ந்துள்ளது. ரூ.4300 என இருந்த ஒரு டெம்போ எம்சாண்ட் தற்பாது ரூ.5300 என உயர்ந்துள்ளது. ரூ.4000 என இருந்த ஜல்லி தற்போது ரூ.4300 என அதிகரித்துள்ளது. சிமென்ட் மூடை ரூ.385 இருந்தது ரூ.425 என உயர்ந்துள்ளது. இதே போல் அனைத்து கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் சிறிய கட்டிடமாக இருந்தாலும் எஸ்டிமேட்டை விட கட்டுமான தொகை மிக அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தை பொருத்தவரை விவசாயத்துக்கு அடுத்தபடியாக பெரிய  வேலைவாய்ப்பை கட்டுமான தொழில் அளித்து வருகிறது. இளைஞர்கள், முதியவர்கள் என்றில்லாமல், பட்டம், பட்டமேற்படிப்பு படித்த இளைஞர்கள் உள்பட  பல்லாயிரக்கணக்கானோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  இருக்கும் சூழலில் இவர்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். செங்கல் உற்பத்தி செய்வதற்கு தேவையான செம்மண் எடுப்பதற்கான கெடுபிடிகள் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் குழித்துறை, தோவாளை, செண்பகராமன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் செங்கல்சூளைகளில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் கட்டிட அனுமதிக்கான பிளான் அப்ரூவல் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் வரைபட வரைவாளர்கள், சர்வேயர்களும் வேலை இழந்துள்ளனர். கொரோனா தாக்கம் காரணமாகவும், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் காரணமாகவும் கட்டுமான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். எனவே கட்டுமான தொழிலை மேம்படுத்தும் வகையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

கட்டுமான பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மூலப்பொருட்கள் எடுப்பது, இறக்குமதி செய்வது ஆகியவற்றில் உள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து கட்டுமான தொழிலில் ஈடுபடும் பால்ராஜ் கூறும்போது, கட்டுமான பொருட்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது. இது இந்த தொழிலை நலிவடைய செய்துள்ளது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. எனவே விலை உயர்வை கட்டுப்படுத்துவதோடு, கட்டுமான பொருட்கள் தடையின்றி தாராளமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kumari , Rising construction material prices in Kumari: Thousands of workers lose their jobs
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...