×

வனத்துறையினர் அகற்றிய பிசில் மாரியம்மன் சாமி சிலை மீண்டும் அதே இடத்தில் வைத்து சிறப்பு வழிபாடு: பழங்குடியின மக்கள் பங்கேற்பு

சத்தியமங்கலம்: ஆசனூர் அருகே வனத்துறையினரால் அகற்றப்பட்ட பிசில் மாரியம்மன் சாமி சிலை, மீண்டும் பழங்குடியினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலையை இன்று அதே இடத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் அரேப்பாளையம் பிரிவு அருகே சாலையோர வனப்பகுதியில் பழங்குடியினர் தொன்று தொட்டு வழிபட்டு வந்த பிசில் மாரியம்மன் சாமி சிலையை கடந்த 14ம் தேதி வனத்துறையினர் அகற்றி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், வனப்பகுதியில் இருந்த சாமி சிலையை அகற்றிய வனத்துறையினரை கண்டித்து நேற்று முன்தினம் பா.ஜ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை அறிவித்தனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், கோபி ஆர்.டி.ஓ., ஜெயராமன் தலைமையில் அரேப்பாளையம் வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி நல்ல முடிவை அறிவிப்பதாக ஆர்.டி.ஓ., உறுதி அளித்ததால், அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கலெக்டர் கதிரவன், அதே இடத்தில் மீண்டும் சாமி சிலையை வைத்து வழிபட அனுமதி அளித்தார். தொடர்ந்து நேற்று மாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் அருண்லால் வனத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிசில் மாரியம்மன் சாமி சிலையை பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன், ஆசனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியன், பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி ஜீவபாரதி ஆகியோர் முன்னிலையில் கோயில் பூசாரிகளிடம் ஒப்படைத்தார்.

சிலையை பெற்றுக்கொண்ட பழங்குடியின மக்கள், சிலையை நேற்று இரவு நீர்நிலையில் வைத்து இன்று காலை மீண்டும் சிறப்பு பூஜைகள் செய்து பவானிசாகர் எம்எல்ஏ ஈஸ்வரன், கோபி ஆர்டிஓ ஜெயராமன், சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா ஆகியோர் முன்னிலையில் வனப்பகுதியில் சிலை அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் இன்று சிலை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Tags : foresters ,Bisil Mariamman Sami , Special worship of Bisil Mariamman Sami statue removed by foresters at the same place: Indigenous people participation
× RELATED தர்மபுரியில் விவசாய கிணற்றில்...