×

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவியின் மருத்துவ கனவு நிறைவேறுமா?

மேட்டுப்பாளையம்: மருத்துவ படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தினால் மட்டுமே என்னை போன்ற மாணவர்களின் மருத்துவராகும் கனவு நிறைவேறும் என நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ரம்யா வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் இடஒதுக்கீடு மசோதா இன்னும் அமலுக்கு வரவில்லை. இதனால், கிராமப்புற மாணவர்களின் மருத்துவராகும் வாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ரம்யாவின் மருத்துவராகும் கனவு நிறைவேறுமா என அவரின் பெற்றோர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு அரசுப்பள்ளியில் பிளஸ் 2 முடித்து, எந்த ஒரு கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் ரம்யா நீட் தேர்வு எழுதி 720க்கு 145 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ரம்யாவின் தந்தை சுந்தரம் கூலி தொழிலாளி. தாய் உஷாராணி ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இவர்களது வருவாயில் தங்களது மகளை சிரமப்பட்டு படிக்க வைத்தும் ரம்யாவின் மருத்துவ கனவு நிறைவேறவில்லை. இன்னும் ரம்யாவை போல் எத்தனையோ மாணவர்கள் மருத்துவராகும் லட்சியம் இடஒதுக்கீட்டால் தடைபட்டுள்ளது.

இதுகுறித்து மாணவி ரம்யா கூறியதாவது: அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பை முடிக்கும் கிராமப்புற மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவை தேர்வு செய்வதில்லை. இதற்கு காரணம், பிளஸ் 2 முடித்து வெளியே வரும் நீட் தேர்வுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். இதற்கு பொருளாதார வசதி இல்லாதது தான்.

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அரசுப்பள்ளியில் கொரோனா காலகட்டத்தில் ஆசிரியர்கள் நடத்திய பாடத்தை படித்து அவர்களின் உதவியுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் மருத்துவர் ஆக வேண்டும் என்றால் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் மருத்துவராக வாய்ப்பு உள்ளது. இடஒதுக்கீடு அமலானால் என்னை போல் நிறைய பழங்குடியின மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் உயிரியல் பாடத்தை தைரியமாக தேர்வு செய்து படிப்பதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து மருத்துவர்கள் உருவாவதற்கும் வாய்ப்பு உருவாகும். இதனால், கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கனவு நிறைவேற இடஒதுக்கீட்டை அரசு அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : student , Student, medical dream
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...