×

பெரம்பலூர் மாவட்டத்தை திருச்சி தொல்லியல் நிர்வாக வட்டத்துடன் இணைக்க வேண்டும்: வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பெரம்பலூர்: புகழ் பெற்ற தொல்லியல் சின்னங்களான ரஞ்சன்குடிகோட்டை, வாலீஸ்வரர் கோவில், சமாஸ்கான் பள்ளிவாசல், காரை முதுமக்கள் தாழிகள் உள்ளடங்கிய பெரம்பலூர் மாவட்டத்தை திருச்சி இந்திய தொல்லியல் நிர்வாக வட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர், வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்தியஅரசின் இந்திய தொல்லியல் நிறுவனம் (ஏஎஸ்ஐ) தமிழ்நாடு முழுவதும், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 400க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னம் மற்றும் தளங்களைப்பாதுகாத்து, பராமரித்து வருகிறது. தமிழகத்தை இரண்டாகப் பிரித்து, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய வட்டம் உருவாக்கப்படும் என்று மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலத்சிங் படேல் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி அறிவித்தார்.

இந்திய அளவில் வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும் கொண்ட தமிழ்நாட்டில் பல்வேறு தொல்லியல் சின்னங்களை கண்டறியவும், பாதுகாக்கவும் தமிழகத்தை இரண்டு வட்டங்களாகப் பிரித்தது அனைத்து தரப்பினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன்படி தற்போதைய அறிவிப்பின்படி திருச்சி வட்டமானது, தென்னக மாவட்டங்களை உள்ளடக்கியப் பல்வேறு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள்மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பகுதிகளாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் இருந்து வந்ததால், திருச்சியைத் தலையிடமாகக் கொண்ட இந்திய தொல்லியல் நிறுவனத்துடன் பெரம்பலூர் மாவட்டமும் இணைந்து இருக்குமென்று நினைத்து இருந்தனர்.

ஆனால், ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலுக்கும், ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண் ட சோழபுரம் கோவிலுக்கும் முன்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் கிபி 9ம் நூற்றாண்டில் பராந்தகச் சோழன் ஆட்சியில் கட்டப்பட்ட, புகழ்பெற்ற வாலிகண்டபுரம் வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோயில், வரலாற்றில் ஆங்கிலேயர் கள் ஆட்சி அமைய அடித்தளமிட்ட, கிபி 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, 17ம் நூற் றாண்டில் முகமது அலி- ஆங்கிலேயக் கூட்டுப்படைக்கும், சந்தாசாஹிப்- பிரெஞ்சுக் கூட்டுப் படைக்கும் இடையே நடந்த சரித்திரப் புகழ்பெற்ற வால்கொண்டாப் போர் நடைபெற்ற ரஞ்சன்குடி கோட்டை, கிபி 1723ல் கட்டப்பட்ட வாலிகண்டபுரம் சமாஸ்கான் பள்ளிவா சல் போன்ற இந்தியத் தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் சென்னை வட்டத்துடன் இணைக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.

இதற்கு முன்பாக, பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம் ஆகியவை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்துடன் உடலாகவும், உயிராகவும் ஒட்டி இருந்தது. பெரம்பலூர் மாவட்டம் திருச்சியுடன் 50 கிலோமீட்டர் தொலைவை மட்டுமே கொண்டுள்ளது. சென்னை 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நிர்வாகக் காரணங்களுக்கு திருச்சி வட் டத்துடன் இணைந்து இருப்பதே தற்போது இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் பெரம்பலூர் பகுதியில் உள்ள ரஞ்சன்குடி கோட்டை, வாலிகண்டபுரம் சிவன் கோயில், சமஸ்கன் மசூதி, காரை பகுதியில் முதுமக்கள் தாழி அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள 100 ஏக்கர் பரப்பளவு பகுதிகள் மேம்படவழிவகுக்கும். திருச்சியுடன் அரியலூர் மாவட்டம் இணைந்து இருப்பதுபோல, பெரம்பலூர் பகுதியும் திருச்சி வட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

பெரம்பலூர் போன்ற பகுதிகள் தொல்லியல் அளவில் மேம்படவேண்டும் என்றால் நிர்வாக வசதிகளுக்காக அருகிலுள்ள பகுதியுடன் இணைக்கப்படுவதே நல்லது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா தெரிவித்திருப்பதாவது: தற்போது நிர்வாகப் பணிகள் பிரிப்பது தொடக்க நிலையில் இருப்பதால் அதற்குள் பெரம்பலூர் பகுதிகள் முதல் நிலையிலேயே திருச்சி வட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். அதன் மூலமே இந்தியத் தொல்லியல் சின்னங்களை அதன் தொன்மை மாறாமல் சீரமைக்கவும், பாதுகாக்கவும், சுற்றுலாப் பயணிகள், தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் வருகைக்கு ஏற்றஅடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் முடியும். இதற்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் பரிந்துரைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : district ,Perambalur ,Historians , Perambalur, Historians
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி