×

இரவு நேரங்களில் ஊருக்குள் நடமாடும் காட்டு யானைகள்: வனகிராம மக்கள் அச்சம்

கோவை: கோவை வனகிராமங்களில் இரவு நேரங்களில் ஊருக்குள் நடமாடும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கோவை வனக்கோட்டத்தில் கோவை, போளூவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் என 7 வனச்சரகம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு மாடு, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இவற்றில், யானை, காட்டுப்பன்றி மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள் அடிக்கடி வனப்பகுதிக்கு அருகே உள்ள ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில வாரமாக அதிகளவில் யானை நடமாட்டம் வனத்தையொட்டிய ஊர்களில் காணப்படுகிறது. இந்த யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றித்திரிகின்றன. இதில், கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட வீரபாண்டி, வரப்பாளையம், மருதமலை ஐ.ஒ.பி காலனி, சின்னதடாகம், தடாகம் செங்கல்சூளை, நஞ்சுண்டாபுரம், பகுதிகளிலும், சிறுமுகை உளியூர், காந்தவயல், மொக்கமேடு, லிங்காபுரம், போளூவாம்பட்டியில் முள்ளாங்காடு, செம்மேடு, பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் யானை நடமாட்டம் தொடர்ந்து இருக்கிறது. யானைகளுக்கு வனத்தில் போதிய உணவு கிடைக்காமல் ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்வதாக கூறப்படுகிறது. மேலும், யானைகள் வனத்திலிருந்து வெளியேறும் போது யானை-மனித மோதல் நடக்கிறது. இதனால், மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவமும் நடக்கிறது.

கடந்த 11-ம் தேதி இரவு தடாகம் செங்கல்சூளையில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர், யானை தாக்கி உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரப்பாளையம் பகுதியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் புகுந்த காட்டு யானை பயிர்களை நாசம் செய்தது. பண்ணை வீடுகளை சேதம் செய்கிறது. வனகிராமங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் வனகிராம பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 8 மணி முதலே யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. எனவே, அங்கு தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யானைகள் அதிகமாக வெளியேறும் பகுதிகள் கண்டறியப்பட்டு அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஒரு சிறப்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு வாகனங்கள், பட்டாசு, டார்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வனத்தில் இருந்து வெளியேறும் யானைகளை மீண்டும் அடர் வனத்திற்குள் விரட்டும் பணியில் விடிய விடிய ஈடுபட்டுள்ளனர். யானைகள் வனத்தில் இருந்து வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்காணிப்பு பணிகள் மட்டுமே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் யானை நடமாட்டம் குறித்து தடாகம் செங்கல்சூளை உரிமையாளர்கள் கூட்டம் நடத்தி வனத்துறையினர் யானை-மனித மோதல்களை தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது: வனத்தில் இருந்து வெளியேறும் யானைகளை மீண்டும் வனத்திற்குள் அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து யானை வெளியேறும் இடங்களை கண்காணித்து அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் யானை, மனித மோதல்களை தடுக்க முடியும். குறிப்பாக, மது குடித்து விட்டு இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வன கிராமப்பகுதிகளில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

இப்பகுதியில் வாழும் விவசாயிகள், பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். செங்கல்சூளை பணியாளர்கள் வீட்டிற்கு முன்பு தூங்க கூடாது. வனச்சாலைகளில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். காட்டு யானைகளின் வழித்தடங்களில் நடமாட கூடாது. யானை நடமாட்டம் இருந்தால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : city ,forest people , Wild elephants
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்