×

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனுமதியில்லை: அண்ணாமலையார் கோயிலில் குழந்தைகளுடன் காத்திருந்த பெற்றோர்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் குழந்தைகளுடன் பெற்றோர் வெளியே காத்திருந்து அவதிப்பட்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஊரடங்கு தளர்வின் காரணமாக கடந்த மாதம் முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அடையாள அட்டை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால், வெளியூர் மற்றும் ெவளிமாநில பக்தர்கள் வருகை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று வழக்கத்தைவிட பக்தர்களின் வருகை பன்மடங்கு அதிகரித்திருந்தது. அதனால், பக்தர்களின் தரிசன வரிசை, ராஜகோபுரத்தை கடந்து வெளி பிரகாரம் வரை நீண்டிருந்தது. பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி மூலம் கைகளை தூய்மை செய்தல் போன்ற விழிப்புணர்வு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், வரிசையில் சமூக இடைவெளி வெகுவாக குறைந்தது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட நபர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. குழந்தைகளுடன் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுத்ததால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் குழந்தைகளுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்களுடன் வந்தவர்கள் தரிசனம் முடித்து திரும்பும் வரை, ராஜகோபுரம் வெளியே காத்திருந்து அவதிப்பட்டனர். ஒரே இடத்தில் இப்படி கூட்டமாக அமர்ந்திருப்பதால் கொரோனா நோய்த்தொற்று பரவ வழி வகுக்குமே தவிர வேறு எந்த பயனும் இல்லை.

தரிசனத்துக்கு அனுமதித்தால் உடனுக்குடன் வெளியே சென்று விடுவார்கள். எனவே குழந்தைகளுடன் தரிசனம் செய்ய அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான நேற்று பராசக்தி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Tags : Corona ,Parents ,children ,Annamalaiyar Temple , Thiruvannamalai, Corona
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்