×

ஆறு, காடுகளை கொண்டதே ஆற்காடு: வேண்டிய வரம் தரும் வரதராஜ பெருமாள்

பழங்காலத்தில் ஆறு, காடுகளைக் கொண்டிருந்ததால் ஆறுகாடு என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் ஆற்காடு என்று அழைத்ததாகவும். இவ்வூரைச் சுற்றி ஆர் மரங்கள் (ஆர்-அத்தி) நிறைந்த காடு இருந்ததால் ஆற்காடு என்று அழைத்ததாகவும் பாலாற்றங்கரையில் காடு சூழ அமைந்ததால் ஆறும், காடும் சேர்ந்து ஆற்காடு என்றழைக்கப்படுவதாகவும் ஆற்காட்டிற்கு பல்வேறு பெயர்க் காரணங்கள் கூறப்படுகிறது.

ஆற்காடு சோழ நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது. சோழ நாட்டின் வட பகுதியில் குறிப்பிடத்தக்க ஒரு நகரமாக ஆற்காடு சிறப்புப் பெற்றிருந்தது. ஆற்காடு நகரத்தைச் சங்க காலத்தில் அழிசியும் அவன் மகன் சேந்தனும் ஆட்சி புரிந்துள்ளனர். கிபி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க நூலாசிரியர் தாலமி ஆற்காட்டை ஆர்க்கபோஸ் என்று குறிப்பிடுகிறார். மேற்கண்ட சான்றுகள் மூலம் ஆற்காடு இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த நகரமாகத் திகழ்ந்துள்ளது எனத் தெரிகிறது.

மேலும் சங்ககாலத்தில் ஆற்காடு என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் கி.பி. 11ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் காலத்தில் திருவழுத்தூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலையில் உள்ள விஜயநகர மன்னன் வீர சதாசிவ மகாராயர் கல்வெட்டில் ராஜ நாராயணபுரமான ஆற்காடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் நவாப்புகள் காலத்தில் ஆற்காட்டை முகமதுபூர் என்றும், தர்-அல்னூர் என்றும் அழைத்துள்ளனர். முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் காலத்தில் ஆற்காடு கர்நாடகத்தின் தலைநகராக இருந்துள்ளது. கி.பி. 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கர்நாடக பகுதிகளை ஆண்ட மன்னர்களின் தலைநகர் ஆற்காடு. தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் ஆற்காடும் அடங்கியிருந்துள்ளது. பின்னர் 1956ம் ஆண்டு ஆந்திரா தமிழக எல்லைகள் பிரிக்கப்பட்ட போது சித்தூர் ஆந்திர மாநிலத்திலும், ஆற்காடு தமிழ்நாட்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வரலாற்றிலும், சங்க இலக்கியங்களிலும் புகழ்பெற்ற ஆற்காடு நகரம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் வரலாற்று சிறப்புமிக்க நகரமாக திகழ்கிறது. 7.49 சதுர கிலோ மீட்டர் கொண்ட முதல் நிலை நகராட்சி. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 55ஆயிரத்து 917 பேர் வசிக்கின்றனர். 30 வார்டுகளை கொண்டுள்ளது. தற்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரமாக உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதான நகரங்களில் ஒன்றாக ஆற்காடு உள்ளதாலும் அதனைச் சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளதாலும் அங்கு வசிக்கும் மக்கள் தங்களது தேவைகளுக்காக ஆற்காட்டிற்கு வந்து செல்கின்றனர்.

மேலும் ஆற்காட்டில் பாலாற்றங்கரையில் 1100 ஆண்டு பழமை வாய்ந்த சோழ மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டிய வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற தோப்புக்கானா கங்காதர ஈஸ்வரர் வaரதராஜ பெருமாள் கோயில், காசி விசுவநாதர் கோயில், கைலாசநாதர் கோயில், திருஅண்ணாமலையார் கோயில் மற்றும் பல்வேறு அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. தமிழகத்திலேயே முதல் முறையாக காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆற்காட்டில் தொடங்கப்பட்டது. சென்னையிலிருந்து வேலூர் செல்லும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாகனங்கள் ஆற்காடு வழியாகவே செல்கின்றன. அதே போல் ஆரணியிலிருந்து திமிரி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஆற்காடு வந்து செல்கின்றன.

மேலும் திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் ஆற்காடு வழியாகவே செல்கின்றன. இதனால் ஆற்காடு நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. எனவே புறவழிச்சாலை அமைக்க வேண்டும். ஆற்காட்டில் உள்ள பல்வேறு வரலாற்று சின்னங்களை ஒன்றிணைத்து ஆற்காட்டை சுற்றுலா தலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே ஆற்காடு நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பு பால்போல ஓடிய பாலாற்றில் மணல் கூட இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மணல் கடத்தலை தடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும். அனைத்து பகுதி பஸ்களும் வந்து செல்லும் வகையில் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். ஆற்காடு நகரில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 3 பெரிய கால்வாய்களை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்டவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

Tags : Varadaraja Perumal ,Arcot ,river , Arcot, Varadaraja Perumal
× RELATED தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்