×

பெரியார் பல்கலை.,யின் அடுத்த துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை அமைக்க தயக்கம் காட்டும் உயர்கல்வித்துறை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழு அமைக்க, உயர்கல்வித்துறை தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தற்போது உள்ளவருக்கே காலநீட்டிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சேலம் உள்பட 4 மாவட்டங்களில் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்று 105 கலை, அறிவியல் கல்லூரிகளும், பல்கலைக்கழகத்திற்குள் 27 துறைகளும் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான குழந்தைவேலு, கடந்த 2018ம் ஆண்டு முதல் அப்பதவியில் உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை (சர்ச் கமிட்டி), ஏற்கனவே அமைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக உயர்கல்வித்துறை இந்த விவகாரத்தில் தயக்கம் காட்டுவதாகவும், தற்போது உள்ளவருக்கே காலநீட்டிப்பு வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியதாவது: பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை நியமிக்க, ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவையின் சார்பில் பிரதிநிதிகளை நியமித்து, அதனை உயர்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும். பின்னர், தமிழக அரசின் பிரதிநிதியாக ஒருவர் நியமிக்கப்பட்டு, அவர் தேடுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். அந்த தேடுதல் குழு சார்பில், புதிய துணைவேந்தர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடுதல், விண்ணப்பங்களை பெறுதல், அவற்றை பரிசீலனை செய்தல், தகுதி வாய்ந்த கல்வியாளர்கள் 3 பேரை தேர்வு செய்து, அதனை கவர்னருக்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு பல மாதங்கள் ஆகும் என்பதால், துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதம் முன்னதாகவே, தேடுதல் குழு அமைக்கப்பட வேண்டும்.

சேலம் பெரியார் பல்கலைகழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில், தற்போதுள்ள துணைவேந்தர்களின் பதவிக்காலம் வரும் ஜனவரியில் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவையின் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில், அதற்கான எந்தவித நடவடிக்கையும், இதுவரை மேற்கொள்ளப்படவில்ைல. உயர்கல்வித்துறையும் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் மெத்தனமாக உள்ளது. தற்போதுள்ள துணைவேந்தர், மத்திய பாஜ அரசுக்கு இணக்கமானவர் என்பதை பல சமயங்களில் நிரூபித்துள்ளார். இதனால், அவர்களின் பரிந்துரையின் பேரில், இவரது பதவிக்காலத்தை மேலும் நீட்டிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே தேடுதல் குழுவை நியமிக்க உயர்கல்வித்துறையும் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, ஏற்கனவே உள்ள கட்டிடங்களை இடிப்பது, மீண்டும் புதிதாக கட்டுவது போன்ற பணிகள் மட்டுமே நடந்துள்ளன. நிர்வாகம் சார்ந்த வளர்ச்சி, ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் நலன், ஆராய்ச்சியில் முன்னேற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படவில்லை. இதே நிலை மீண்டும் நீடித்தால், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி சார்ந்த எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எனவே, தமிழக உயர்கல்வித்துறை இனியும் தாமதிக்காமல், தகுதி வாய்ந்த ஒருவரை அடுத்த துணைவேந்தராக நியமிக்க, தேடுதல் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

நாக் அங்கீகாரம் பெற ஆர்வமில்லை

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளித்து, தரவரிசைப்படுத்த நாக் அமைப்பு செயல்பட்டு வருகிறது. யூஜிசியின் நிதி உள்பட பல்வேறு விவகாரங்களுக்கு, இந்த அங்கீகாரம் மற்றும் தரவரிசை உதவிகரமாக இருக்கும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கான நாக் தரவரிசை மற்றும் அங்கீகாரம் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகம் சார்பில், மீண்டும் அந்த அமைப்பிற்கு விண்ணப்பித்து, தரவரிசை பெற வேண்டும். ஆனால், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், அந்த விவகாரத்தில் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனால், இதுவரை அதற்காக விண்ணப்பிக்கவில்லை என பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Department of Higher Education ,search committee ,Vice Chancellor ,Periyar University , Department of Higher Education, Salem
× RELATED மீனவர்கள் மீன் வளர்ப்பில் நவீன...