×

திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியில் நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள் மனித உயிர்களை காவு வாங்குவது ஏன்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட பகுதிகளான சலவாதி, மேல்பேட்டை, சாரம், ஒலக்கூர், கோனேரிக்குப்பம், ஓங்கூர் மற்றும் ஜக்காம் பேட்டை ஆகிய இடங்களில் தொடர் விபத்துகளால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கான காரணம் குறித்து நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஒலக்கூரில் இருந்து திண்டிவனம் வரை பல்வேறு இடங்களில் ரத்த காட்டேரி உலவுவதாகவும், இரவு நேரங்களில் சாலையின் குறுக்கே நிழல்போல் குறுக்கிடுவதால் விபத்து ஏற்படுவதாகவும் மிரட்சியுடன் தெரிவிக்கின்றனர். திடீரென பார்வையை மறைத்து இருளாக்கிவிடுவதே விபத்துக்கு காரணமென தெரிவிக்கின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு 547 விபத்துகளில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். 742 பேர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். 2019ம் ஆண்டு 517 விபத்துகளில் 99 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 742 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

2020ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இ பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையிலும் இதுவரை 306 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. இதில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். 328 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஊரடங்கு நேரத்தில் மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இரவு நேரங்களில் அவ்வப்போது ஆம்னி பேருந்துகள் விபத்துகளும் அதிகரித்து வருகிறது.

இதேபோல் ஒலக்கூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால் காவல் நிலையத்தில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது மேல் பேட்டை அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சதானந்தம் என்பவரும் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் போது சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஒலக்கூர் மற்றும் ரோஷனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் விபத்துகளால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் நெடுஞ்சாலை துறையினர் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாததே காரணமாகும். மற்றபடி அப்பகுதியில் உள்ள வளைவுகால் ஏற்படுகிறது என்பது உள்பட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து எதிர்காலங்களில் பெரிய விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து ஓட்டுனர் அர்ஜூனன் கூறியதாவது: சென்னையில் கார் ஓட்டுனராக இருந்து வருகிறேன்.எனது சொந்த ஊர் திண்டிவனம் அருகே உள்ள நொளம்பூர். சென்னையில் இருந்து அடிக்கடி திண்டிவனத்துக்கு இரவு நேரங்களில் வந்து செல்வது வழக்கம். அப்போது ஓங்கூர் ஏரிக்கரை அருகே ஏதோ ஒரு நிழல் சாலையின் குறுக்கே செல்வது போல் தெரியும். அப்போது நான் வீட்டுக்கு சென்றவுடன் என் அம்மாவிடம் நடந்ததை சொல்வேன். அதற்கு எனது அம்மா மற்றும் உறவினர்கள் அந்த இடத்தில் ரத்த காட்டேரி உலவுவதாக தெரிவித்தனர்.

அன்று முதல் ஓங்கூரிலிருந்து சாரம் வரை வாகனம் ஓட்டும் பொழுது பதட்டமாகவே இருக்கும். பலமுறை காரில் வரும் பொழுது அந்த இடங்களில் சிறு, சிறு விபத்துகளில் சிக்கி உள்ளேன். ஒரு முறை இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது ஏரிக்கரை அருகே இருசக்கர வாகனம் தன்னையும் மீறி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்துக்கு இழுத்து சென்றது.

சுதாரித்துக்கொண்ட நான் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் உதவியுடன் இருசக்கர வாகனத்தை தூக்கி சாலையில் நிறுத்தி பிறகு வீட்டுக்கு சென்றேன். ஆகையால் ஓங்கூரில் இருந்து சாரம் வரும் வரை மிதமான வேகத்தில் மட்டுமே வருவேன். நானும் பல வாகன ஓட்டிகளிடம் இது குறித்து எடுத்துக் கூறி உள்ளேன். இப்பகுதியை கடக்கும் போது 60 கிலோ மீட்டருக்கு மேல் செல்லாமல் மெதுவாக செல்ல வேண்டும் என்றார்.

டிகேபி ரமேஷ் (திண்டிவனம்): சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து பல பேர் பல கருத்துக்களை கூறுகின்றனர். விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, செல்போன் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுவது, பல கிலோமீட்டர்களிலிருந்து வருபவர்களுக்கு திண்டிவனம் ஒரு சென்டர் பிளேஸ் என்பதால் இந்த இடம் வந்தவுடன் தூக்கம் வரத் தொடங்கும். அப்படி தூக்கம் வரும் ஓட்டுநர்கள் லேபை மற்றும் வாகனங்கள் நிறுத்த கூடிய இடத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு சிறிது நேரம் தூங்கினால் விபத்துகளை குறைக்கலாம் என்றார்.

திண்டிவனம் டிஎஸ்பி கணேசன் கூறியதாவது: திண்டிவனம் கோட்டத்தில் அதிக விபத்து ஏற்படுவதற்கு ஓட்டுநர்கள் ஓய்வில்லாமல் தொடர்ந்து வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணமாகும். தூக்கம் வந்தால் வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு, ஓய்வெடுத்து செல்ல வேண்டும். சேலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி செல்பவர்கள் இரவு நேரம் என்பதாலும், பல கிலோ மீட்டரில் இருந்து வருவதாலும் திண்டிவனம் வந்தவுடன் தூக்கம் வருகிறது. இதுவே அதிக விபத்துக்கு காரணம்.இதனை குறைக்கும் விதமாக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் ஒலிபெருக்கி மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். இருசக்கர வாகனத்தில் வருவோர் தலைக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். விபத்துகள் ஏற்படும் இடங்களை அடையாளப்படுத்தி ஒளிரும் மின்விளக்குகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோபிநாத் (வழக்கறிஞர்): தேசிய நெடுஞ்சாலைகளில் ஓங்கூர் வரை விபத்துகளுக்கு காரணம் சாலை ஓரங்களில் திருநங்கைகள் வாகனத்தை வழிமறிப்பதால்தான் நடக்கிறது.

லாரிகள் செல்லும் போது திடீரென எதிரே வந்து கையை காட்டும்பொழுது ஓட்டுனர் திடீரென பிரேக் போடுவதால், பின்னால் வரும் வாகனம் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது. போலீசார் திருநங்கைகளை சாலையோரம் நிற்க விடாமல் அப்புறப்படுத்த வேண்டும். இவர்களின் நிழலை பார்த்து ரத்த காட்டேரி என வாகன ஓட்டிகள் பதட்டம் அடைகின்றனர். மது போதை, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதால் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது என்றார்.

Tags : accidents ,area ,highway ,Olakur ,Tindivanam , Villupuram, Highway
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு