×

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இரவு நேரங்களில் இறக்கப்படும் மீன் குஞ்சுகள்

புதுக்கடை: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தடை உத்தரவையும் மீறி இரவு நேரங்களில் வளமீன்கள்(குஞ்சு மீன்கள்) இறங்குவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் குறும்பனை முதல் நீரோடி வரையிலான மீனவ மக்கள் பயன்படும் வகையில் சுமார் ரூ.105 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட துறைமுகம் ஆகும். இந்த துறைமுகத்தில் தற்போது தூத்தூர் இனயம் மண்டலங்களை சேர்ந்த சுமார் 710 விசை படகுகளிலும், 6 ஆயிரத்துக்கு அதிகமான பைபர் நாட்டுப் படகுகளிலும் மீன்பிடிக்கப்படுகிறது. நேரடியாகவும், மறை முகமாகவும் பல்லாயிரக் கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்த துறைமுகம் மூலம் மாதம் சுமார் ரூ.50 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருமானம் கிடைப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் பிற மாநிலத்தவர் மீன் பிடிக்க கூடாது என விதிமுறை உள்ளது. ஆனால் ஒரு சிலரின் துணையுடன் ஏராளமான கேரளா விசை படகுகள் இந்த துறைமுகத்திற்கு வருவதாக புகார்கள் உள்ளன.

குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட குஞ்சு மீன்கள் (வள மீன்கள்) கேரளா படகுகள் மூலம் அதிக அளவில் பிடிக்கப்படுகிறது. கடலில் மீன் பிடிக்கும் போது வலையில் வருகின்ற குஞ்சு மீன்களை கடலில் வீசி விட வேண்டும் என்பது விதி முறை. அப்போது தான் பிற மீன்களுக்கு அது உணவாகும். ஆனால் கேரள விசை படகுகள் இந்த மீன்களை கடலில் கொட்டாமல் பல நாட்கள் சேகரித்து வைத்து அதை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் கொண்டு வந்து, சட்டத்திற்கு புறம்பாக லாரிகளில் ஏற்றி விற்பனை செய்கின்றனர்.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் அதிகாரிகள் உதவியுடன் புரோக்கர்களாக செயல்படுகின்றனர். இந்த வள மீன்கள் கொண்டு வரும்போது சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் துர் நாற்றம் ஏற்படும். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு பொது மக்கள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள சில முக்கிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்டுகொள்ளாத காரணத்தால் இந்த வள மீன் பிரச்னை தேங்காப்பட்டணத்தில் மட்டும் கோடிகளை குவிக்கும் தொழிலாக மாறிவிட்டது.

வள மீன்கள் கேரளாவிலோ, குமரிமாவட்டத்தில் உள்ள பிற மீன்பிடி துறை முகங்களிலோ இறக்கப் படுவதில்லை. குமரி மாவட்டத்தின் பிற துறைமுகங்களில் கேரளா படகுகள் செல்ல அனுமதிப்பதும் இல்லை. ஆனால் தேங்காப்பட்டணத்தில் மட்டும் இந்த சம்பவம் தொடர்வது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கேள்வி குறிகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக துறைமுக மீன்பிடி தொழிலார் சங்க தலைவர் சேசாரி கூறுகையில், மீன்வளத்துறையின் மண்டல இணை இயக்குனர் எங்களை சந்தித்து, விதி முறைகளை மீறும் கேரளா படகுகள் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்யப்படும் என்றார். ஆனால் அன்று இரவே விஷமிகள் பல படகுகளில் வள மீன்கள் இறங்கியுள்ளனர். இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலாண்மை குழு அமைக்க வேண்டும்

முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சித்திக் கூறியது: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இதுவரை ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கிய துறைமுக மேலாண்மைக்குழு நியமிக்கவில்லை. ஒரு சில வியாபாரிகள், விசைப்படகு பங்குதாரர்கள் என கூறிக் கொள்பவர்கள், சில மீனவ சங்க உறுப்பினர்கள் இணைந்து மீன் வளத்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்த துறைமுகம் செயல்படுகிறது. அரசின் வழிகாட்டு நெறி முறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. கேரளா விசைப்படகுகள் தடை செய்யப்பட்ட இழுவலைகள் பயன்படுத்தி, அழுகிய மீன்கள், வள மீன்கள் இறக்கப் படுகின்றன. இரவு நேரங்களில் நூற்றுக்கும் அதிகமான கனரக வாகனங்கள் தங்கு தடையின்றி வந்து செல்கிறது.

சுகாதாரக் கேடு காரணமாக சுற்று வட்டார பகுதி மக்கள் பல தொற்று நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே துறைமுகத்தை பாதுகாக்க உள்ளாட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கிய மேலாண்மை குழு உடனடி அமைக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளேன் என கூறினார்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு

கடந்த 14ம் தேதி இது தொடர்பான புகார்களையடுத்து, மீன் வளத்துறையின் மண்டல இணை இயக்குனர் இளம் வழுதி சம்பவ இடம் வந்து ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் தேங்காப்பட்டணத்தில் கேரளா படகுகள் அனுமதி இல்லை எனவும், வள மீன்கள் இறக்க கூடாது எனவும் கூறினார். ஆனால் அன்று இரவு பல விசை படகுகளில் பல டன் வள மீன்கள் அங்கு இறக்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என அப்பகுதி பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

Tags : fishing harbor , Tenkapattanam, fishing port
× RELATED காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை...