×

திற்பரப்பில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது: கோதையாறு, தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

குலசேகரம்: பேச்சிப்பாறை அணை திறப்பால் கோதையாறு, தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை 48 அடி கொள்ளளவு கொண்டதாகும். கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் அப்பர் கோதையாறு அணை நிரம்பி, அங்கிருந்து பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் அதிகளவு வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது. இதையடுத்து பேச்சிப்பாறை அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில் நீர்மட்டம் 45.20ஐ தொட்டது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வீதம் மறுகால் ஷட்டர் வழியாக திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. ஆறு பாய்ந்தோடி செல்லும் திற்பரப்பு, திருவரம்பு மற்றும் குழித்துறை தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையில் 1667 கன அடி தண்ணீர் உள்வரத்து ஆக இருந்தது. 1000 கன அடி தண்ணீர் மறுகால் ஷட்டர் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

இது தவிர 300 கன அடி தண்ணீர் பாசன கால்வாய் வழியாக விடப்பட்டு உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 45.10 அடியாக உள்ளது. மழை சற்று ஓய்ந்த நிலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் உபரி நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. அணைக்கு 550 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. இருப்பினும் பாசன கால்வாயில் 550 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 72 அடியாக உள்ளது. பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு காரணமாக கோதையாற்றின் குறுக்கே அமைந்துள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக திற்பரப்பு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : places , thirparappu
× RELATED ராமேஸ்வரத்தில் 25 இடங்களில் குடிநீர் தொட்டி: பொதுமக்கள் மகிழ்ச்சி