×

கல்லிடையை தொடர்ந்து முக்கூடலில் சம்பவம்: கோயில் விழாவுக்கு வந்த யானை சாவு

பாப்பாக்குடி: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி வனப்பகுதியில் நோயுற்ற யானை இறந்த நிலையில் முக்கூடலில் கோயில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்ட யானையும் உடல்நலம் பாதித்து இறந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாவூத்மீரான் (50), யானை பாகன். 54 வயதுடைய லட்சுமி என்ற பெண் யானையை இவர் வளர்த்து பராமரித்து வந்தார். கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு யானையை அழைத்துச் செல்வது வழக்கம். முக்கூடல் முத்துமாலையம்மன் கோயில் திருவிழாவுக்காக யானையை நேற்று முன்தினம் ரவணசமுத்திரத்தில் இருந்து முக்கூடலுக்கு அழைத்துச் சென்றார்.

முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் நீராடிய யானைக்கு உணவு அளித்து விட்டு அங்கு தங்கினார். இரவு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் யானை நள்ளிரவு உயிர் இழந்தது. இதையடுத்து முக்கூடல் போலீசார் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். நெல்லை வன கால்நடை மருத்துவர் மனோகரன், ஆலங்குளம் கால்நடை உதவி இயக்குனர் ஜான்சுபாஷ், முக்கூடல் கால்நடை மருத்துவர் சிவமுத்து ஆகியோர் யானை உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து யானை உடலை முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது அப்பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் கல்லிடைக்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு சுற்றித்திரிந்த கர்ப்பிணி யானை, தனியார் தோட்டத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த சம்பவங்களில் இரண்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Incident ,trio ,Death ,stoning ,temple ceremony , Temple ceremony, elephant
× RELATED ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்...