×

பாஜக எங்கே என தேடும் நிலைதான் புதுச்சேரியில் உள்ளது: முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி, :புதுவை முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடங்களை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது மிகப்பெரிய வரலாற்று துரோகம். இது பிற்படுத்தப்படுத்த மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதி. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை. இதை எதிர்த்து பிரதமர் மோடிக்கு புதுவை அரசு சார்பில் கடிதம் எழுதியுள்ளேன்.

ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது ஏற்படும் இழப்பீட்டு தொகையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான இழப்பீட்டு தொகையை மத்திய அரசு தராமல் அடாவடி செய்து வருகிறது. மாநில அரசுகளே வெளிச்சந்தையில் கடன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியது. ஆனால், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் வற்புறுத்தலால் இப்போது மத்திய அரசு பணிந்து வெளிச்சந்தையில் இருந்து தானே கடன் பெற்றுத்தருவதாக ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், புதுவைக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.798 கோடி விரைவில் கிடைக்கும்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டும் கொடுக்கப்படவில்லை. மாநிலத்துக்கான அதிகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்து வருகிறது. இப்படியே புதுவை மாநில அரசின் செயல்பாடுகளை படிப்படியாக குறைத்து, தமிழ்நாட்டுடன் இணைக்க பார்க்கிறார்கள் என ஆதாரத்துடன் நான் கூறியிருந்தேன். ஆனால், புதுவைக்கான பாஜக பொறுப்பாளர் ரவி அதை மறுத்துள்ளார். நான் கூறிய ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை.

புதுவைக்கு எதிரான கட்சி பாஜக. இங்கு அந்த கட்சி எங்கு இருக்கிறது? என தேட வேண்டிய நிலை உள்ளது. அக்கட்சிக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் ரங்கசாமி வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்டபோதும், மக்கள் அவர்களை புறக்கணித்துள்ளனர். நாங்கள் புதுச்சேரியை அமைதி பூங்காவாக வைத்திருக்கவே விரும்புகிறோம். ஒருசில சம்பவங்களை வைத்து வேறு மாதிரி பிரசாரம் செய்து வருகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Puducherry ,Narayanasamy ,interview ,BJP , BJP, Pondicherry, Chief Minister Narayanasamy, Interview
× RELATED வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல்...