×

கோவையில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

கோவை: கோவையில் குப்பைத் தொட்டியில் பச்சிளம் பெண் குழந்தையை வீசி சென்ற தாய் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அம்மா உணவகம் செயல்படுகிறது. நேற்று மதியம் உணவகத்தில் இருந்த உணவு கழிவுகளை ஊழியர் கிரிஜா குப்பை தொட்டியில் கொட்ட சென்றார். அப்போது குப்பைக்கு இடையே சிறிய துணி போர்த்திய நிலையில் பெண் குழந்தை கிடந்தது.

பிறந்து ஒரு சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பார்த்த கிரிஜா சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் மற்றும் போலீசார் அங்கே சென்று குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் கூறுகையில், ‘‘ குழந்தையின் தாய், தந்தை யார் என விசாரித்து வருகிறோம். பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏற வந்தவர்களில் யாராவது இந்த குழந்தையை போட்டு பஸ் ஏறி சென்றிருக்கலாம். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கிறோம். குழந்தையின் தாயை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை சில நாட்கள் மருத்துவமனையில் வைக்கப்படும். பின்னர் குழந்தைகள் காப்பகத்தில் முறைப்படி ஒப்படைக்கப்படும், ’’ என்றார்.

குழந்தையை மீட்டு எடுத்த போது அங்கேயிருந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘ தொப்புள் கொடி காஞ்சு ஒரிரு நாள் தான் இருக்கும். நாங்க குப்பை தொட்டிய எட்டி பாக்காம இருந்தா நாய் கடிச்சு இழுத்துட்டு போயிருக்கும். குழந்தைய இப்படி வீசிட்டு போன அம்மாவ சும்மா விடக்கூடாது. குழந்தையோட எதிர்காலம் என்னாகும்னு பெத்தவங்க நெனச்சு பாக்கணும், ’’ என்றனர்.

Tags : baby girl ,Coimbatore , Coimbatore, trash, woman, child
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...