×

2வது சூப்பர் ஓவரில் பஞ்சாப்பிடம் வீழ்ந்தது மும்பை

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2வது சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியும் மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. மும்பை இன்னிங்சை கேப்டன் ரோகித், டி காக் இணைந்து தொடங்கினர். ரோகித் 9 ரன் மட்டுமே எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த சூர்யகுமார் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இஷான் கிஷண் 7 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளிக்க, மும்பை அணி 5.1 ஓவரில் 38 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், டி காக் - குருணல் பாண்டியா ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 58 ரன் சேர்த்தது. குருணல் 34 ரன் (30 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரவி பிஷ்னோய் பந்து வீச்சில் ஹூடா வசம் பிடிபட்டார். 39 பந்தில் அரை சதம் அடித்த டி காக் 53 ரன் (43 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஜார்டன் பந்துவீச்சில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் போலார்டு - கோல்டர் நைல் ஜோடி பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ள, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது.

போலார்டு 34 ரன் (12 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), கோல்டர் நைல் 24 ரன்னுடன் (12 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ஷமி, அர்ஷ்தீப் தலா 2, ஜார்டன், பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மும்பை அணிக்கு கடைசி 3 ஓவரில் 54 ரன் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கேப்டன் கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்து அவுட்டனார்.   இறுதியில் 6 விக்கெட் இழப்பு பஞ்சாப் அணி 176 ரன் எடுத்ததால் போட்டி டையானது.

இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் 2 அணிகளும் தலா 5 ரன்கள் எடுத்ததால் 2வது சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. இதில் மும்பை அணி 1 விக்கெட் இழந்து 11 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 15 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் கேயில் 7 ரன், அகர்வால் 8 ரன் அடித்தார்.

Tags : Punjab ,Mumbai ,Super Over , Punjab fell to Mumbai in the 2nd Super Over
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்