×

கொரோனாவால் கடந்த அரையாண்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி கடும் சரிவு: ஆபரண ஏற்றுமதியும் குறைந்தது

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் தங்கம் 57 சதவீதம், வெள்ளி இறக்குமதி  63.4 சதவீதம் சரிந்துள்ளது. நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி 55 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் தொழில்துறைகள் முடங்கியதால், சர்வதேச சந்தையில் பங்கு முதலீட்டாளர்கள் பாதுகாப்புக் கருதி தங்கத்தில் முதலீடு செய்து வந்தனர். இதனால், உள்ளூர் சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதுபோல், தங்கத்துக்கு மாற்றாக வெள்ளியிலும் முதலீடு அதிகரித்தது. இதுவும் உள்ளூர் சந்தையில் வெள்ளி விலை உயர காரணமாக அமைந்தது.

தற்போது விலை சரிந்து வருகிறது. இருப்பினும், ஊரடங்கால் பொதுமக்கள் பலர் வாழ்வாதரத்தை இழந்ததால், தங்கம் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளத. இந்நிலையில், தங்கம், வெள்ளி இறக்குமதி விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் காலாண்டில் தங்கம் இறக்குமதி 57 சதவீதம் சரிந்து 680 கோடி டாலராக (சுமார் ₹50,658 கோடி) உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் தங்கம் இறக்குமதி 1,580 கோடி டாலராக (₹1,10,259 கோடி) இருந்தது.

இத்துடன் ஒப்பிடுகையில் கடந்த அரையாண்டில் தங்கம் இறக்குமதி 57 சதவீதம் சரிந்துள்ளது. இதேபோல், வெள்ளி இறக்குமதியும் மேற்கண்ட அரையாண்டில் 63.4 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது, இந்த காலக்கட்டத்தில் 73.35 கோடி டாலர்  (5,543 கோடி) மதிப்பிலான வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கடந்த அரையாண்டில் 55 சதவீதம் சரிந்து 870 கோடி டாலராக இருந்தது. தங்கம், வெள்ளி இறக்குமதி சரிந்ததால், கடந்த அரையாண்டில் வர்த்தகப் பற்றாக்குறை 2,344 கோடி டாலராக குறைந்துள்ளது.

முந்தைய நிதியாண்டில் இந்த பற்றாக்குறை 8,892 கோடி டாலராக இருந்தது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தங்கம், வெள்ளி இறக்குதி மற்றும் ஏற்றுமதி சரிவுக்கு கொரோனா பரவல்தான் முக்கிய காரணம்  வழக்கமாக இந்தியாவில் தங்கம் ஆண்டுக்கு 800 முதல் 900 டன் இறக்குமதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona , Gold and silver imports plummet in the last half of the year due to the Corona: Jewelery exports also declined
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...