×

கேப்டன் வார்னர் போராட்டம் வீண்; சூப்பர் ஓவரில் வென்றது கேகேஆர்: பெர்குசன் அபார பந்துவீச்சு

அபுதாபி: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பரபரப்பான சூப்பர் ஓவரில் வெற்றியை வசப்படுத்தியது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் கலீல் அகமது, ஷாபாஸ் நதீமுக்கு பதிலாக பாசில் தம்பி, அப்துல் சமத் இடம் பெற்றனர். கொல்கத்தா அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. கிரீன், பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக குல்தீப் யாதவ், லோக்கி பெர்குசன் சேர்க்கப்பட்டனர்.

ஷுப்மான் கில், திரிபாதி இருவரும் கேகேஆர் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 48 ரன் சேர்த்தது. திரிபாதி 23 ரன் (16 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி நடராஜன் வேகத்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து கில் - ராணா இணைந்து 2வது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்தனர். கில் 36 ரன் (37 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ரஷித் சுழலில் கார்க் வசம் பிடிபட்டார். ராணா 29 ரன் எடுத்து ஷங்கர் பந்துவீச்சில் கார்க் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 88 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

அதிரடி வீரர் ரஸ்ஸல் 9 ரன் மட்டுமே எடுத்து நடராஜன் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க, கொல்கத்தா அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில், கேப்டன் மோர்கன் - தினேஷ் கார்த்திக் இணைந்து அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் கடைசி 5 ஓவரில் 58 ரன் சேர்த்தனர். மோர்கன் 34 ரன் (23 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் அவுட்டானார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் குவித்தது. கார்த்திக் 29 ரன்னுடன் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐதராபாத் பந்துவீச்சில் நடராஜன் 2, பாசில், ஷங்கர், ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. பேர்ஸ்டோ, வில்லியம்சன் இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 58 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. வில்லியம்சன் 29 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெர்குசன் வேகத்தில் ராணா வசம் பிடிபட்டார். திடீர் சரிவு: பிரியம் கார்க் 4 ரன், பேர்ஸ்டோ 36 ரன் (28 பந்து, 7 பவுண்டரி), மணிஷ் பாண்டே 6, விஜய் ஷங்கர் 7 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஐதராபாத் அணி 109 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது.

கடும் போராட்டம்: இந்த நிலையில், 4வது வீரராகக் களமிறங்கிய கேப்டன் வார்னர், இளம் வீரர் அப்துல் சமத் உடன் இணைந்து கடுமையாகப் போராடினார். இருவரும் சேர்ந்து 37 ரன் எடுக்க, ஆட்டம் பரபரப்பானது. அப்துல் 23 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மாவி பந்துவீச்சில் கில் வசம் பிடிபட்டார். ரஸ்ஸல் வீசிய கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டது.இக்கட்டான நிலையில், முதல் பந்து ‘நோ பால்’ ஆக அமைய 1 ரன்னும், பிரீ ஹிட்டும் கிடைத்தது. அதில் ரஷித் 1 ரன் எடுக்க, அடுத்த 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார் வார்னர்.

5வது பந்தில் 2 ரன் கிடைக்க, கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்ட நிலையில் ‘லெக் பை’ மூலமாக 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஐதராபாத் அணியும் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்ததால் ஆட்டம் சரிசமனில் முடிந்தது (டை). வார்னர் 47 ரன் (33 பந்து, 5 பவுண்டரி), ரஷித் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் பெர்குசன் 3, வருண், மாவி, கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சூப்பர் ஓவர்: இதையடுத்து வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. கொல்கத்தா வீரர் பெர்குசன் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் வார்னர் கிளீன் போல்டானார்.

அடுத்த பந்தில் 2 ரன் எடுத்த அப்துல் சமத், 3வது பந்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். இதனால், 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஐதராபாத் அணி 2 ரன்னுக்கு சூப்பர் ஓவரை இழந்தது. அடுத்து வெற்றிக்கு 3 ரன் மட்டுமே தேவை என்ற எளிய இலக்குடன் கேகேஆர் களமிறங்கியது. ரஷித் கான் வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்ததால் ஐதராபாத் அணிக்கு சற்று நம்பிக்கை துளிர்த்தது. எனினும், 4வது பந்து ‘லெக் பை’ ஆக அமைய, கார்த்திக் - மோர்கன் இணை வேகமாக 2 ரன் ஓடி வெற்றியை வசப்படுத்தியது. விறுவிறுப்பான இந்த போட்டியில் மொத்தம் 5 விக்கெட் அள்ளி (3+2) அசத்திய பெர்குசன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Tags : Warner ,struggle ,KKR ,Ferguson , Captain Warner's struggle was in vain; KKR won the Super Over: Ferguson bowled brilliantly
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கே.கே.ஆர்....