வழக்கறிஞர் ராஜேஷ் கொலை வழக்கில் 8 பேர் கைது; பழிக்கு பழியாக கொன்றோம் மேலும் பலரை கொல்வோம்: பரபரப்பு வாக்குமூலம்

பெரம்பூர்: வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (45), வழக்கறிஞர். இவரது மனைவி ரம்யா, மக்கள் ஆளும் அரசியல் என்ற கட்சி நடத்தி வருகிறார். அதில், ராஜேஷ் ஆலோசகராக இருந்து வந்தார். கடந்த 4ம் தேதி இரவு வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலையில் கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகே அமர்ந்து இருந்த ராஜேசை மர்ம கும்பல் வெட்டி கொன்றது. இதுதொடர்பாக, 8 பேர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வில்லிவாக்கம் போலீசார், இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

வியாசர்பாடி பி.வி.காலனியில் சூழ்ச்சி சுரேஷ், முருகேசன் ஆகியோர் ஒரு அணியாகவும், பிரபல ரவுடி சேராவின் மகன் கதிரவன் மற்றும் தொப்பை கணேஷ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். யார் பெரிய ரவுடி என்பதில் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் நடைபெற்று வந்தது. இதன்காரணமாக, சுழ்ச்சி சுரேஷ் தரப்பை சேர்ந்த இடிமுரசு இளங்கோ 2013ம் ஆண்டும், பழனி 2016ம் ஆண்டும், திவாகர் 2019ம் ஆண்டும் கொல்லப்பட்டனர். இதேபோல், கதிரவன் தரப்பை சேர்ந்த முத்து பாட்ஷா 2013ம் ஆண்டும், ஜப்பான் சரவணன் 2014ம் ஆண்டும், சாலமன், சீனிவாசன் ஆகியோர் 2017ம் ஆண்டும் கொலை செய்யப்பட்டனர்.

தற்போது கொலையான ராஜேஷ், கதிரவன் தரப்புக்கு வழக்கறிஞராக செயல்பட்டு வந்துள்ளார். இந்த தரப்பில் யார், எந்த வழக்கில் கைது செய்யப்பட்டாலும் உடனுக்குடன் அவர்களை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வந்துள்ளார். மேலும், கதிரவனுடன் சேர்ந்து பல பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சூழ்ச்சி சுரேஷ் மற்றும் முருகேசனின் செல்வாக்கு குறைந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ராஜேஷை விட்டு வைத்தால் நாம் வளர முடியாது என்று கருதி, அவரை வெட்டிக்கொல்ல திட்டமிட்டனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு பெரம்பூரில் ராஜேஷை கொல்ல முயன்றபோது, ஒரு வீட்டிற்குள் ஓடி கதவை மூடிக்கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே போலீசார் அங்கு வந்ததால், அவர் உயிர் தப்பினார். இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின்பேரில், செம்பியம்  போலீசார் முருகேசனை கைது செய்தனர். ஆனாலும், முருகேசன் தரப்பினர் ராஜேஷை கொல்ல தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதன்படி, சம்பவத்தன்று அவரை வெட்டி கொலை செய்துள்ளனர். கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ‘‘பழிக்கு பழியாகவே வழக்கறிஞர் ராஜேஷை கொன்றோம். இந்த கொலையுடன் நிறுத்த மாட்டோம். வெளியே வந்ததும் தொப்பை கணேசன், கதிரவன் மற்றும் மதுரையில் உள்ள சேரா ஆகியோரை கொலை செய்வோம்,’’ என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சூழ்ச்சி சுரேஷ், அருண்பாண்டியன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, 4 நாள் போலீஸ் காவல் முடிந்து 8 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர்.இரண்டு தரப்பிலும் பழிக்குப்பழியாக 8 கொலைகள் நடந்துள்ள நிலையில், மேலும் பல கொலைகள் நடைபெறும் என குற்றவாளிகள் கூறியுள்ளதால், வியாசர்பாடி பி.வி.காலனி பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Related Stories:

>