திருப்பத்தூர் அருகே திடீர் பனி மூட்டத்தால் விவசாய நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே திடீர் பனிமூட்டத்தால் மலையடிவார விவசாய நிலத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. கோவையில் தனியார் நிறுவனம் கோவையைச் சுற்றி பார்க்கவும், பல்வேறு இடங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லவும் ஹெலிகாப்டரை வாடகைக்கு இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தை பெங்களூருவைச் சேர்ந்தவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், கோவையை சேர்ந்த நகைக்கடை அதிபர் சீனிவாசன் (45), மனைவி கவிதா, மகன்கள் திலீப், கோகுல், மகள் ரேஷ்கா ஆகிய 5 பேர் தனி ஹெலிகாப்டரில் கோவையில் இருந்து திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று காலை 7.45க்கு புறப்பட்டனர்.

பெங்களூருவை சேர்ந்த பைலட்டுகள் எஸ்.கே.சிங், பைரவன் ஆகியோர் இயக்கினர். காலை 9.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி, தாதன்குட்டை அருகே வரும்போது, திடீரென பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் திசையை கண்டறிய முடியாமல், சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செய்வதறியாமல் திகைத்த பைலட் ஹெலிகாப்டரை தாதன்குட்டை அருகே மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தில் தரையிறக்கினார். விவசாய நிலத்தில் திடீரென ெஹலிகாப்டர் தரையிறக்கப்பட்ட தகவல் அப்பகுதியில் பரவியது. ஹெலிகாப்டரை பார்க்க அப்பகுதி மக்கள் திரண்டனர்.

தகவலறிந்த கந்திலி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, ‘சிக்னல் கோளாறு மற்றும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது தெரியவந்தது. பனிமூட்டம் கலைந்ததும் காலை 11 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் திருப்பதிக்கு புறப்பட்டது.  இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>