×

திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சதி குறித்து விசாரிக்கப்படும்; மர்ம குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து அறிவிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி, “உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தொடுத்த மேல்முறையீட்டு விசாரணை தாமதமாவதை - தமிழக அரசின் வழக்கறிஞரும், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்” என்ற முக்கியமானதுமான குற்றச்சாட்டை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். எடப்பாடி அதிமுக அரசுக்கு எழுதிய கடிதத்திலேயே அவ்வாறு அவர் குறிப்பிட்டிருப்பது, ஜெயலலிதாவின் மரணத்தில்-விசாரணை முடித்து வெளியிடுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தயாராக இல்லை;  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்  விரும்பவில்லை என்று நன்றாகத் தெரிகிறது.

 25.9.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணைக் கமிஷனை அமைத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த ஆணையத்தை அமைத்த 25.9.2017 தேதியிட்ட அரசு ஆணை எண் 817-ல் “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து 3 மாதங்களுக்குள் தனது அறிக்கையை ஆங்கிலத்திலும் தமிழிலும் தாக்கல் செய்ய வேண்டும்” என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 37 மாதங்கள் உருண்டோடி விட்டன. ஆனால், இன்னும் விசாரணை கமிஷனின் விசாரணை முடிந்து, அறிக்கை வரவில்லை. “ஜெ., மரணத்தில் முதல் குற்றவாளி” என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் குற்றம் சாட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், 20.12.2018 அன்று ஆஜராக வேண்டும் என்று விசாரணை ஆணையம் உத்தரவிட்டது.

அந்த அழைப்பாணையை ஏற்று- அவர் இன்றுவரை, 22 மாதங்களாக விசாரணைக்கே ஆஜராகவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்த  உடனே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து-ஏப்ரல் 2019ல் தடையுத்தரவு பெற்றது அப்ேபாலோ மருத்துவமனை. இந்தத் தடையை நீக்கும் வழிவகை தெரியாமல் - 18 மாதங்களாக, “சட்டப் போராட்டப் புலி” பழனிசாமி பதுங்கிக் கிடக்கிறார்; பம்மாத்து செய்கிறார்! முதல் ரவுண்டில் “தர்மயுத்தம்” நடத்தி,  துணை முதல்வர் பதவி பெற்ற ஓ.பன்னீர் செல்வம் இப்போது, “தர்ம யுத்தம்-2” என்று மிரட்டினார். ஆனால் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் “சம்மனை” நினைவூட்டியதாலும், வேறு சில காரணங்களினாலும்,- ஒரே வாரத்தில் பழனிசாமிக்கு “முதல்வர் வேட்பாளர்” என்று ஆசி வழங்கி, கட்சிக்குள்ளேயே ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு,

இரண்டாவது தர்ம யுத்தத்தையும் முடித்துக் கொண்டு, அமைதியாகி விட்டார் பன்னீர்செல்வம்.எனவே, ஜெயலலிதா மரணத்தை வைத்து, “இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்” ஆகியோருக்கு இடையில் இந்த நான்கு வருடங்களாக ஒரு நாடகம், நடக்கிறதே தவிர- ஒரு முன்னாள் முதல்வரின் மரணத்தில்“சதி” குற்றச்சாட்டு பற்றி இன்னும் விசாரித்து முடிக்கவில்லை. இந்நிலையில்தான் விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி அரசு வழக்கறிஞர், கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் ஆகியோர் மீது குற்றம் சாட்டிக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இவர்கள், “அம்மா” என்பதையும், “விசாரணை” என்பதையும், அர்த்தமற்றவையாக ஆக்கியிருக்கிறார்கள். தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று, திமுக ஆட்சி அமைந்ததும்- நான் ஏற்கனவே தேர்தல் பிரசாரங்களில் கூறியபடி-மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சதியை விசாரித்து-மர்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி, அவர்கள் அனைவரும்  சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன்! இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Jayalalithaa ,death ,formation ,DMK ,announcement ,MK Stalin , DMK regime, Jayalalithaa's death, mystery criminals, MK Stalin
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...